கோழிக்கோடு,

இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுக் கவுன்சில் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கேரளத்தின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க கோழிக்கோடு மாநகரத்தில் துவங்கியது.

பொதுக் கவுன்சில் கூட்டம் நான்கு நாட்கள் நடைபெறும். சிஐடியுவின் தலைவர் டாக்டர் கே.  ஹேமலதா முகமது அமீன் நகரில் (தாகூர் நூற்றாண்டுக் கூடத்தில்)  பொதுக் கவுன்சில் கூட்டத்தின் செங்கொடியை உறுப்பினர்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏற்றினார். பின்னர் உறுப்பினர்கள் தியாகிகளின் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் தொடங்கியது.

டாக்டர் கே. ஹேமலதா தன் தலைமையுரையில் உலகம் முழுதும் நடைபெற்று வருகின்ற நிகழ்ச்சிப்போக்குகளையும் உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொழிலாளர்கள் நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்தும் விளக்கினார். தொழிலாளர் வர்க்கத்தின் முன்பும் மக்கள் முன்பும் இதற்கெதிராக மாற்றுக் கொள்கையை முன்வைத்து அவர்களைப் போராட்டப்பாதையில்  அணிதிரட்ட வேண்டிய நமது கடமையையும் வலியுறுத்தினார்.

அடுத்து பொதுச் செயலாளர் தபன்சென் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

“நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் மட்டு மே  ஆட்சியாளர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவி வரும் எதேச்சாதிகார மற்றும் மதவெறி நடவடிக்கைகளை முறியடித்திட முடியும்.  உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் உலக அளவிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தியிருக்கக்கூடிய சீர்கேடுகளை ஆராயும்போது, ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. இவற்றுக்கெதிராக எவ்விதமான உத்தியை நாம் தீர்மானித்தபோதிலும், நம்முடைய இறுதி லட்சியத்தை நோக்கிச் செல்கின்ற நம் திசைவழியை அது எவ்விதத்திலும் தடுத்திடக் கூடாது.”

இவ்வாறு தபன்சென் பேசினார்.  அடுத்து பொதுச் செயலாளரின் அறிக்கை மீது உறுப்பினர்களின் விவாதம் தொடங்கியது.

தீர்மானங்கள்

பொதுக் கவுன்சிலில் திரிபுராவில் பாஜக மற்றும் ஐபிடிஎப் குண்டர்களால் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல்களுக்கு  ஆளான திரிபுரா மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு  அனைத்துத்துறைகளிலும் நிரந்தர வேலைவாய்ப்புக்குப் பதிலாக குறிப்பிட்ட கால அளவிலான வேலைவாய்ப்பை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு எதிராக கேரளாவில் 16 தொழிற் சங்கங்கள் இணைந்து வரும் ஏப்ரல் 2 அன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருப்பதற்கு பொதுக் கவுன்சிலி ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு-வின்  இணைந்துள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஏப்ரல் 2 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அன்றைய தினம் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது.

மேலும் பொதுக்கவுன்சிலில், 25 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான புவனேஷ்வர் ஆவணம் மேம்படுத்தப்பட இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவங்களின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தில் இன்னும் போய்ச்சேராத பிரிவினர்கள் மத்தியிலும் சங்கத்தைக் கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் தொடர்பான ஆவணம் மேம்படுத்தப்பட இருக்கிறது.

பொதுக் கவுன்சில் கூட்டம் நடைபெறுவதையொட்டி நகரில் பல மையங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்களும் நடைபெற இருக்கின்றன.

பொதுக் கவுன்சிலின் நிறைவு நாளான 26ஆம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் மாபெரும் பேரணி/பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பேரணியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.  பொதுக்கூட்டத்தில் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன் சென், துணைத் தலைவர் ஏ.கே.பத்மனாபன், மாநிலத் தலைவர் அனதலவட்டம் ஆனந்தன், பொதுச் செயலாளர் இளமாறம் கரீம் உரையாற்றுகிறார்கள்.

(என்.எஸ்.சஜித், கோழிக்கோட்டிலிருந்து)

Leave a Reply

You must be logged in to post a comment.