கோழிக்கோடு, மார்ச் 23-

இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுக் கவுன்சில் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கேரளத்தின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க கோழிக்கோடு மாநகரத்தில் துவங்கியது.

பொதுக் கவுன்சில் கூட்டம் நான்கு நாட்கள் நடைபெறும். சிஐடியுவின் தலைவர் டாக்டர் கே.  ஹேமலதா முகமது அமீன் நகரில் (தாகூர் நூற்றாண்டுக் கூடத்தில்) உரைநிகழ்த்துகிறார்.

நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்ட மத்திய அரசு முடிவெடுத்திருக்கக்கூடிய பின்னணியில் பொதுக் கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

தலைமையுரைக்குப்பின்னர், பொதுச் செயலாளர் தபன்சென் அறிக்கையை சமர்ப்பிக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான புவனேஷ்வர் ஆவணம் மேம்படுத்தப்பட இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவங்களின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தில் இன்னும் போய்ச்சேராத பிரிவினர்கள் மத்தியிலும் சங்கத்தைக் கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் தொடர்பான ஆவணம் மேம்படுத்தப்பட இருக்கிறது.

சாதி வெறியர்களுக்கும், மத வெறியர்களுக்கும் உதவக்கூடிய விதத்திலும் தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதத்திலும் மத்திய அரசு பின்பற்றிவரும் கேடுகெட்ட நடவடிக்கைகள் பொதுக் கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு, அவற்றை முறியடித்திட உரிய வியூகங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

பொதுக் கவுன்சில் கூட்டம் நடைபெறுவதையொட்டி நகரில் பல மையங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்களும் நடைபெற இருக்கின்றன.

பொதுக் கவுன்சிலின் நிறைவு நாளான 26ஆம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் மாபெரும் பேரணி/பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பேரணியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.  பொதுக்கூட்டத்தில் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன் சென், துணைத் தலைவர் ஏ.கே.பத்மனாபன், மாநிலத் தலைவர் அனதலவட்டம் ஆனந்தன், பொதுச் செயலாளர் இளமாறம் கரீம் உரையாற்றுகிறார்கள்.

(கோழிக்கோட்டிலிருந்து என்.எஸ். சஜீத், தேசாபிமானி செய்தியாளர்)

Leave a Reply

You must be logged in to post a comment.