தேனி,
குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் 11-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கி 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன், சென்னையை சேர்ந்த அனுவித்யா, திருப்பூரை சேர்ந்த சத்யகலா, சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி, ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலத்த காயம் அடைந்த சென்னை புழுதிவாக்கத்தில் வசித்து வந்த ஜெயஸ்ரீ (வயது 32) 12-ந் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இறந்தார். அவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆகும். இதையடுத்து இந்த தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி மற்றும் சென்னையைச் சேர்ந்த நிவ்யா பிரக்ருதி என்ற இரு பெண்களும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.