புதுதில்லி:
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என்று தில்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ள நீதிபதிகள், இவ்விஷயத்தில் எம்எல்ஏ-க்கள் பதிலளிப்பதற்கு போதிய அவகாசம் வழங்காமல் தேர்தல் ஆணையம் அவர்களைத் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது; என்றும், அரசியல் சட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் செயல் என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.2015-ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி, தில்லியில் ஆட்சிக்கு வந்த நிலையில், அமைச்சர்களுக்கு உதவியாக நரேஷ் யாதவ், சோம் தத், பிரவீன் குமார், நிதின் தியாகி உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களை, பார்லிமெண்டரி செகரட்டரி எனப்படும் அமைச்சரவை செயலர்களாக நியமித்து, கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்தார்.

தில்லி அரசுக்கான சட்டத்தின் படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலரை நியமிக்க முடியும். ஆனால், முதல்வர் கேஜ்ரிவால் 21 பேரை அமைச்சரவை செயலர்களாக நியமித்திருப்பதாக அப்போதே புகார்கள் எழுந்தன.

பார்லிமெண்டரி செகரட்டரி என்ற இந்த பதவி துணை முதல்வருக்கு இணையானது என்பதுடன், இப்பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களும், ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகிப்பவர்கள் ஆகின்றனர்; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிப்பது சட்டப்படி தவறு; இதனால் 21 எம்எல்ஏ-க்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. பிரசாந்த் படேல் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்தியதாக கூறிய தேர்தல் ஆணையம், புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில்- ஜர்னைல் சிங் என்பவர், முன்பே பதவியை ராஜினாமா செய்ததால், அவர் மீதான குற்றச்சாட்டை மட்டும் ரத்து செய்து விட்டு- ஏனைய 20 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று கடந்த ஜனவரி 19-ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது.
பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவரும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தில்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தங்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில், சட்டவிதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, நேர்மையான முறையில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை; எனவே, தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் தங்களின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இன்று இந்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். அதேநேரம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களின் தொகுதிளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு எதையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும் 20 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கத்திற்கு பரிந்துரை செய்தது தொடர்பான முழு தகவல்களையும் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சந்தர் சேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 76 பக்கங்களில் தங்களின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், “ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் அளித்த ஒப்புதல் மற்றும் மத்திய அரசின் அறிவிக்கை செல்லாது” என்று அறிவித்தனர்.

மேலும், “20 எம்எல்ஏ-க்களை நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை என்பது மோசமானதாகும்; எம்எல்ஏ-க்கள் 20 பேருக்கும் வாய்மொழியாக எந்த விதமான விளக்கமும் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று கூறிய நீதிபதிகள், “இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அனுப்பியதன் மூலம், இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு இணங்கி செயல்படாமல், சட்டத்தை மோசமாகக் கையாண்டு, அதற்கு களங்கம் கற்பிக்கும் செயலாகும்” என்றும் கடுமையாக சாடினர்.
அத்துடன், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்களின் மனுக்களை மீண்டும் தேர்தல் ஆணையம் மறுபரீசீலனை செய்ய வேண்டும்; என்றும் அவர்கள் இரட்டை பதவி வகித்ததால் தகுதிசெய்யப்பட வேண்டியவர்களா? என்பதை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.