புதுதில்லி:
அதிமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால், மக்களவை 15-ஆவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் காரணமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் 5-வது நாளாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதனிடையே, திங்கட்கிழமை ராமநவமி என்பதால், அன்றைய தினம் வரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை அறிவித்துள்ள சபாநாயகர் சுமித்ரா மகாஜன், செவ்வாய்க்கிழமை மீண்டும் அவை கூடும் என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக வெள்ளிக்கிழமையன்று அவை கூடியதும், விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, உறுப்பினர்கள் அமைதி காத்தால்தான் மற்ற பணிகளை நடத்த முடியும் என்று எம்.பி.க்களுக்கு மகாஜன் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், அதிமுக எம்.பி.க்களும், டிஆர்எஸ் எம்.பி.க்களும் கையில் பதாகைகளை ஏந்தி வழக்கம்போல அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கைக்காக அதிமுக எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு அதிக இடஒதுக்கீடு வழங்கக் கோரி டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்களும் முழக்கமிட்டனர்.

மறுபுறத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கோரி தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் கட்சியின் எம்.பி.க்களும், எஸ்சி-எஸ்டி சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிகார காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பப்புயாதவ் எம்.பி.யும் பதாகையை ஏந்தி முழக்கமிட்டார்.இதையடுத்து, சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். 11 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியபோதும் அமளி தொடரவே, “அவையில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடிப்பதால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியாது; உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டால், தீர்மானத்துக்கு யார் ஆதரவு தருகிறார்கள்,எதிர்க்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க இயலாது” என்று கூறிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடத்த அரசு தயார் என்கிறது; ஆனால், உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்” என்று கூறிவிட்டு, அவையை நாள்முழுவதும் ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.