திருப்பூர், மார்ச் 22-
தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பதைக் கண்டித்து திருப்பூர் ஏ.ஐ.இ. பனியன் நிறுவனத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் நால் ரோட்டில் அமைந்துள்ள ஏ.ஐ.இ. பனியன் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சமீப காலமாக படிப்படியாக தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தி வந்துள்ளனர். இதில் 91 தொழிலாளர்களுக்கு வேலை குறைவாக இருக்கிறது என காரணம் சொல்லி அண்மையில், 15 நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த விடுமுறை முடிந்து கடந்த மார்ச் 16 ஆம் தேதி திரும்ப தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை இல்லை என்று நிர்வாகம் மறுத்துள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரு நாட்களாக தொழிற்சாலை வாயில் முன்பாக தொழிலாளர்கள் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். வியாழன்கிழமை காலை சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க ஏரியா செயலாளர் வி.கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் வேலை வழங்காமல் மறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, பொதுச் செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.குமார், பனியன் சங்கச் செயலாளர் எம்.என்.நடராஜ் ஆகியோர் உரையாற்றினர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிவசாமி வாழ்த்திப் பேசினார்.

தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் வெள்ளியன்று காலை பனியன் ஆலை நிர்வாகத்தையும், சிஐடியு தொழிற்சங்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.