புதுதில்லி:
அதிமுக, டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக வியாழக்கிழமையன்றும் மக்களவை முடங்கியது. இதன் காரணமாக 4-வது நாளாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளன. ஆனால், எம்.பி.க்கள் தொடர் கூச்சல் காரணமாக, நோட்டீஸ் அளித்து 4 நாட்கள் ஆகியும் இன்றும் விவாதம் நடைபெறவில்லை.வியாழனன்று அவை தொடங்கியவுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி.க்களும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், காலையில் கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது.

சிறிதுநேரம் ஒத்திவைப்புக்குப்பின் மீண்டும் அவை கூடியபோதும், அப்போதும் அதிமுக, டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர்.அப்போது, பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர இரு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்து இருக்கிறார்கள். உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து அபை நடந்தால் மட்டுமே தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்றார்.

அப்போது எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், மத்திய அரசு அனைத்து விவகாரங்களுக்கும் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறது. வங்கி மோசடி, நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகியவற்றில் விவாதமும் நடத்தத் தயார். உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுக்க முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறிவிட்டார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். அப்போது, இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் தங்கள் கையை உயர்த்தி தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்மொழிந்த தெலுங்குதேசம் கட்சி எம்.பி. தோட்டா நரசிம்மன், தீர்மானத்தை விரைவாக விவதத்துக்கு எடுக்க வலியுறுத்தினார்.

ஆனால், அதிமுக, டிஆர்எஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டு, அமளியில் ஈடுபட்டதால், அதையே காரணமாக வைத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சபாநாயகர் அவையை நாள்முழுவதும் ஒத்திவைத்தார்.
அதிமுக மீது தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் புகார்

இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுப்பதாக கூறி அ.தி.மு.க எம்.பி.க்கள் மீது தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.
மூன்று முறை நோட்டீஸ் அளித்தும் அமளி காரணமாக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸை சபாநாயகர் விவாதத்திற்கு எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தெலுங்குதேசம் எம்.பி.க்கள், “நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுப்பதற்காகவே அதிமுக மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் அவையை முடக்குகின்றனர்” என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். தங்களின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 50 எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர் என்பதை நிரூபிக்க முடியும் எனவும் அதில் கூறியுள்ளனர்.மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அதிமுக அவையை முடக்குவதாகவும், மத்திய அரசை காப்பாற்ற அ.தி.மு.க. நாடகமாடுவதாகவும் சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.