நாஹான்:
இமாசலபிரதேசத்தில் வங்கிக் கடன், வரி ஏய்ப்பு, மின் கட்டண பாக்கி மூலம் ரூ. 6 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக, இந்தியன் டெக்னோமாக் நிறுவனத்தின் இயக்குநர் வினய் குமார் சர்மாவை சிஐடி புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

இமாசலபிரதேச மாநிலத்தில் பௌண்டா சாகிப் என்ற பகுதியில் உள்ள ஜெகத்பூர் கிராமத்தில் இந்தியன் டெக்னோமேக் என்னும் நிறுவனத்தை வினய்குமார் சர்மா என்பவர் நடத்தி வந்தார்.
இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. எம்.எல்.சர்மா என்பவரின் மகன் ஆவார்.

இந்தியன் டெக்னோமேக் நிறுவனம் மூலம் பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்காக வினய் குமார் சர்மா பல்வேறு வங்கிகளில் ரூ. 2 ஆயிரத்து 167 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர் திரும்ப செலுத்தவில்லை.
அத்துடன், கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் முதல் அரசுக்கு வருமான வரி, விற்பனை வரி ஆகிய எந்த வித வரியையும் செலுத்தாத அவர், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் இபிஎப் போன்ற வசதிகளை செய்துதராமலும், மின்சார வரி போன்றவற்றிலும் கோடி கணக்கில் மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வினய்குமார் சர்மா ரூ. 2 ஆயிரத்து 175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க இமாசலபிரதேச அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து வினய்குமார் சர்மா தனது தொழிற்சாலையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.
சமீபத்தில் தொழில் அதிபர் நிரவ்மோடி ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியான போது வினய்குமார் சர்மா பற்றியும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. வினய்குமார் சர்மா மொத்தத்தில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

வரி ஏய்ப்பு, கடன் பாக்கி, சம்பள பாக்கி, ஓய்வூதியப் பணத்தில் மோசடி, விற்பனை வரியில் மோசடி, மின் கட்டணத்தில் மோசடி என்று அனைத்திலும் வினய்குமார் சர்மா கைவரிசை காட்டி இருப்பது உறுதியானது. இதையடுத்து, இமாசலப்பிரதேச போலீசார் அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் வினய் குமார் சர்மா, புதன்கிழமையன்று போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் பௌண்டா சாகிப் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், அவரை மார்ச் 24-ஆம்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதனிடையே, வினய்குமார் சர்மாவை, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க, சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.