கோவை, மார்ச் 22-
முதன்மை கல்வி அலுவலர் தன்னை ஒருமையில் இழிவாக பேசி விரட்டியதாக மாற்றுத்திறனாளி ஆசிரியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கோவை ராஜவீதி சிசிஎம்ஏ அரசு பள்ளியில் பணியாற்றும் பார்வையற்ற ஆசிரியர் லோகநாதன் என்பவர் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் சிசிஎம்ஏ பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றுகிறேன். இன்று (வியாழனன்று) பள்ளியில் ஓய்வு நேரத்தில் அமர்ந்திருந்தபோது, சக ஆசிரியர் ஆனந்தகுமார் என்பவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான (சிஇஓ) அய்யண்ணன் தன்னை அழைத்ததாக கூறி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு என்னிடம் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

அப்போது, பள்ளி தலைமை ஆசிரியரால் தான் பாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும், பணி இடையூறுகளையும், சலுகை மறுப்பு குறித்தும், இதுதொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், என்னைதகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதுடன், எனது ஊனத்தின் தன்மை குறித்து இழிவாக பேசி வெளியே விரட்டி விட்டார். இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மீது மாவட்ட ஆட்சியர்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, அவரது செல்பேசி எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தெரிவித்தது.

Leave A Reply

%d bloggers like this: