கோவை, மார்ச் 22
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட (ஐசிடிஎஸ்) துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் கோவையில் 18 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கோவையில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இந்த ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. குறிப்பாக, மாதம்தோறும் கிடைக்க வேண்டிய ஓய்வூதியமானது 3 மாதம் அல்லது 4 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஓய்வூதியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தலைவர் அரங்கநாதன், செயலாளர் மதன் ஆகியோர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் வசந்தாதேவியிடம் முறையிட்டனர்.இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்த ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஓய்வூதியர்களின் பட்டியல் மின்னணு முறையில் தயாரிக்கப்பட்டு, கருவூலத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஓய்வூதியம் வங்கி கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். ஆனால், தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மின்னணு முறையில் பட்டியல் தயாரிக்க போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை.

குறிப்பாக, காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஓய்வூதியர்களுக்கு மின்னணு முறையில் பட்டியல் தயாரிக்க, தனியாரிடம் கொடுக்க வேண்டியதுள்ளது. இதற்கு சுமார் ரூ.500 முதல் ரூ.800 வரை செலவாகிறது. இந்த தொகையை எங்கள் சொந்த செலவில் இருந்து செய்ய வேண்டியது உள்ளது. இதனால் தான் கருவூலத்தில பட்டியல் அளிக்க தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறினர்.
-(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.