ஈரோடு, மார்ச் 22-
ஈரோட்டில் மஞ்சள் சந்தையில் புதிய மஞ்சளுக்கு கொள்முதல் விலையை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பெருந்துறை அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதனன்று நடைபெற்ற ஏலத்தில், 75 கிலோ எடை கொண்ட 3 ஆயிரத்து 506 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 369-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 666-க்கும்
விற்பனையானது.

மேலும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 091-க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 1,797 மூட்டை மஞ்சள் விற்பனையானது.இதேபோல், பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் மஞ்சள் கொள்முதல் விலை அதிகரித்தே காணப்பட்டது. இதில் விரலி ரகம் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 69-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 219-க்கும் விற்பனையானது. கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்து 69-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 256-க்கும் விற்கப்பட்டது.

கடந்த வாரத்தில் ஒரு குவிண்டால்மஞ்சள் விலை ரூ.7 ஆயிரத்து 500 முதல் 7 ஆயிரத்து 600 வரை விலை இருந்தது. நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.750 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்தபோதிலும் பழைய மஞ்சள் விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மஞ்சள் கிடங்கு உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு அரசு ஒழுங்குமுறைக் கூடத்துக்கு இதுவரை கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுமஞ்சள் வரத்து இருந்தது. தற்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சேலம் பெருவெட்டு, மினிசேலம் பெருவெட்டு ரகங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ரக மஞ்சளின் திடம் அதிகம். இதன் காரணமாக இந்த ரக மஞ்சள்தான் அதிகபட்ச விலையாக நிர்ணயம் செய்யப்படுவதால் விலை அதிகரித்துள்ளது.

தற்போது ,தருமபுரியில் இருந்து வரும் புதுமஞ்சள் சேலம் பெருவெட்டு ரகத்தின் விலையும், ஈரோடு விரலி நாட்டு ரகத்தின் புதுமஞ்சள் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால், பழைய மஞ்சளின் விலை ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 200 முதல், ரூ.7ஆயிரத்து 500 வரை விற்பனையாகிறது. தற்போது, ஈரோடு விரலி நாட்டு மஞ்சள் ரகத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 288-க்கும் விற்பனையாகிறது. ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 247 விற்பனை செய்யப்பட்டு வருகிறது புதுமஞ்சளை வியாபாரிகளும் அதிக அளவில் வாங்குகின்றனர். புது மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.