====எஸ்.ஜி.ரமேஷ்பாபு====
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறை கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தனது இணையதளத்தில் திருத்தப்பட்ட கடற்கரை மேலாண்மைத் திட்ட நகலை பதிவேற்றம் செய்துள்ளது. ஒவ்வொரு உயர்வலைக்கோடு, தாழ்வலைக்கோடு உள்ளிட்ட பதிவுகளுடன் அனைத்து மீனவ கிராமங்களின் வரைபடங்களும் அதில் உள்ளது. அடுத்த 45 தினங்களுக்குள் பொதுமக்களின் கருத்துக்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்க வேண்டும் எனக் கோரி உள்ளது.

ஆனால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆலோசனைகள், முன்மொழிவுகள் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் சென்றடைவது சாத்தியமற்றது.
இந்த ஆலோசனைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும், அப்பகுதி மக்கள் மத்தியில் பொது கருத்துக்கணிப்பு கூட்டங்கள் நடத்தி உருவாக்கி இருக்க வேண்டும்; ஏனெனில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான மக்கள் தொகை வளர்ச்சி உள்ளிட்டவைகளை கவனத்தில் கொண்டு இந்த வரைபடம் இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. எவ்விதக் கேள்வியும் இல்லாமல் தமிழக அரசும் அப்படியே ஏற்றுக்கொண்டு தனது இணையதளத்தில் வெளியிட்டு கருத்து கேட்கிறது.

மீனவ மக்களிடம் கேளுங்கள்…
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை செயல்படுத்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் தேவை என்பதால் ஒவ்வொரு கடற்கரை மாநிலங்களும், கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில் கடலும் கடற்கரையும் மீனவ சமூகத்திற்கே என்ற உரிமையை பாதுகாப்பதை கடற்கரை மண்டல மேலாண்மை திட்டமே உறுதி செய்ய முடியும்.இத்திட்டத்தில்தான் மீனவ கிராமங்கள், மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துகளான படகுகள் நிறுத்துமிடங்கள், வலை வைக்குமிடங்கள், மீன் காய வைக்குமிடங்கள், மீன்பிடிக்குமிடங்கள், மீன் காய வைக்கும் கலன்கள், மீன்பிடி துறைமுகங்கள், மீனவ கிராமங்களின் சமூக கட்டமைப்புகளான கோயில், தேவாலயம், பள்ளிக்கூடம், சாலை, சமுதாயக்கூடம் மற்றும் மீனவர்களுக்கு ஏற்படும் நீண்ட கால தேவையை மனதில் வைத்து அவர்களுக்கான நீண்ட கால வீட்டு வசதித் திட்டங்கள் போன்றவை உறுதிசெய்யப்படும். எனவே இப்போது போட்டுள்ள கோடுகளை அழித்து ஒவ்வொரு மீனவ கிராம மக்களிடமும் பொதுவிசாரணை நடத்தி அவர்களின் ஒப்புதலுடன், அவர்களில் தேவைகளை கணக்கில்கொண்டு புதிய கிராம வரைபடங்களை வெளியிடவேண்டுமென நாம் கோருகிறோம்.

ஆனால் உண்மையில் நிகழ்வுகள் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த கடற்கரை கோடுகள் போடப்பட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கடற்கரையோரம் வருகின்ற திட்டங்கள் எல்லாம் இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்தே போடப்படும். ஏற்கனவே இந்தியாவின் இயற்கைவளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும் இந்தியப் பெருமுதலாளிகள் தலைமையிலான நிலபிரபுத்துவ-முதலாளித்துவ அரசு, மூலதனக் குவியலை மேலும் அதிகரிக்க கடற்கரை வளங்களை சூறையாட புதுப்புது திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கின்றது. அதுவும், கார்ப்பரேட்டுகளுக்காகவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள மோடி அரசு நவதாராளமய கொள்கையை காங்கிரசைவிட அதிவேகத்தில் அமலாக்கிக் கொண்டிருக்கிறது. இவையனைத்தும் வளர்ச்சியின் பெயரால் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அறிவித்துள்ள திட்டங்கள் எல்லாம் அமலாகுமானால் நெய்தல் நிலம் பாலையாக மாறும்.

கடல் மாலை
மத்திய அரசு கடல் மாலை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கடற்கரையோர திட்டங்களை அமலாக்க உள்ளது. கடல் மாலை திட்டத்திற்கு 2015 மார்ச் 25 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘தேசிய சாகர் மாலா’ எனும் அந்தத் திட்டத்தின் உயர்மட்டக் குழுவில் இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் துறைகளுக்கான அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் அல்லது மாநில துறைமுக அமைச்சர்கள் உறுப்பினராக இருப்பார்கள். மத்திய அரசு ‘சாகர்மாலா’ வளர்ச்சி நிறுவனத்தை கடந்த 2016 ஜூலை 20 ஆம் தேதி 1000 கோடி ரூபாய் மூலதனத்துடன் துவங்கி, தனது பங்காக ரூ.90 கோடி மூலதனம் போட்டுள்ளது.குஜராத் துவங்கி மேற்குவங்கம் வரை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி 7500 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்திட்டம் வரவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 12 மிகப்பெரிய துறைமுகங்களும், 180 சிறிய துறைமுகங்களும் வரவுள்ளன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவில் வரவுள்ள பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலங்கள் அமைய உள்ளன. குஜராத், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் இம்மண்டலங்கள் அமைய உள்ளன.

தமிழகத்தில் பெட்ரோலியரசாயன முதலீட்டு மண்டலம் (PCPIR):
தமிழகத்தில் இம்மண்டலம் கடலூர் – நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்பாணை கடந்த மாதம் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் கடலூரில் 25 ஊராட்சிகளும், நாகை மாவட்டத்தில் 20 ஊராட்சிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இரு மாவட்டங்களிலும் 45 கிராமங்களில் 61,015 ஏக்கர் நிலங்கள் எடுக்க உள்ளார்கள். இதில் நீர்நிலைப் பகுதி 4334 ஏக்கர் ஆகும். கடலூர் மாவட்டத்தில் 28,611 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 32,404 ஏக்கரும் எடுக்க உள்ளனர். ஆனால் 2012 ஜூலை 4 ஆம் தேதி அன்றைய மத்திய அரசு பெட்ரோலிய ரசாயன மண்டலத்தை அறிவித்தபோது சாகர்மாலா திட்டம் இல்லை. இப்போது இத்திட்டத்தில் இதை இணைத்துள்ளது. இத்திட்டம் சுமார் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டிருக்கும். 40 சதமான பகுதிகள் தொழிற்சாலைகளுக்கும், 60 சதமான பகுதிகள் குடியிருப்பு, வணிக மற்றும் உள்கட்டமைப்புகளுக்காக ஒதுக்கப்படும். ஒவ்வொரு பெட்ரோலிய ரசாயன மண்டலமும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படும். கடலூர் – நாகை மண்டலத்திற்கு நாகார்ஜூனா சுத்திகரிப்பு நிறுவனம் மைய நிறுவனமாகும். துணை நிறுவனமாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட் செயல்படும். இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது நாகார்ஜுனா நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, தானே புயலின் போது ஏற்பட்ட சேதத்தையொட்டி அப்படியே முடங்கிவிட்டது. இப்போதும் அங்கு சேதமடைந்த பொருட்களை பாதுகாக்கும் பணியில் உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இருபது ஆண்டுகளாக சுமார் 1600 ஏக்கர் நிலம் எவ்வித பயன்பாடும் இல்லாமல் கிடக்கின்றது. இந்த நிறுவனத்தைத்தான் மைய நிறுவனம் என அறிவித்துள்ளனர். 

மேலும் பெட்ரோலிய ரசாயன மண்டலத்தில் துறைமுகங்கள், தொட்டிகள், உப்புநீர் சுத்திகரிப்பு ஆலை, கழிவு நீர் வெளியேற்றும் இடம், ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் முற்றங்கள் போன்ற கடற்கரையோர முன்னணி நடவடிக்கைகளுக்கு கடற்கரை பயன்படுத்தப்படும். எனினும் மீனவக் கிராமங்களிலிருந்து நிலங்கள் பெறப்படமாட்டாது என மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடற்கரையை நம்பியே இத்திட்டங்கள் வருவது எல்லோரும் அறிந்ததுதான்.
பொதுவாக புதிய திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வரும்போது ஆட்சியாளர்கள் முன்வைக்கும் வாதம், நாட்டின் முன்னேற்றமும் வேலைவாய்ப்பும் பெருகும் என்பதுதான். வளர்ச்சியின் பெயரால் கட்டமைக்கப்படும் இந்த வாதம் எவ்வளவு உண்மை என யாரும் ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்ப்பதில்லை என்பதால் மீண்டும் மீண்டும் வளர்ச்சி குறித்த பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. மேற்கண்ட நாகார்ஜூனா நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தும் போதும் இதே பல்லவியைத்தான் பாடினார்கள். ஆனால் இருபது ஆண்டுகளாக திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை, அதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாய தொழிலாளர்களும் குறிப்பாக பெண்களும் இருபதாண்டுகளாக அல்லல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

ஹைட்ரோ கார்பன் ஆபத்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,40,000 சதுர கி.மீ. பரப்பளவில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை நிலம் மற்றும் கடல் பகுதிகள், காவிரி வடிநில பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் காலங்களில் இவற்றில் எந்தபகுதியில் வேண்டுமானாலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளிக்கப்படலாம். அதேபோன்று தமிழ்நாட்டில் நிலப்பகுதி, கடல் பகுதிகளில் முதல்கட்டமாக 4,099 சதுர கி.மீ.பரப்பளவில் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி கடலூர் மாவட்டம் – தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் – வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 சதுர கி.மீ. நிலப்பகுதியில் 10 கிணறுகள், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. கடல்பகுதியில் 4 கிணறுகள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2,574 சதுர கி.மீ. கடல் பகுதியில் 10 கிணறுகள் என மொத்தம் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் வாயு ஆகியவற்றிற்கு தனித்தனி உரிமம் என்பதை மாற்றி ஒரு உரிமம் பெற்றால் எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில் புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தனியார், உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களும் இப்பணியினை செய்ய ஏலம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கக்கூடிய காவிரி டெல்டா பிரதேசத்தை பாலைவனமாக்கிவிடும்.

பொதுமக்கள் கருத்து எதற்கு?
2009 ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் 88 தொழிற்சாலை பகுதிகளில் காற்று, நீர், நிலம் ஆகியவை மாசுபடுதல் குறித்து விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அதிக சூழல் மாசு உள்ள இடங்களில் கடலூர் 16 வது இடத்தில் உள்ளது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இங்கு சிப்காட் நிறுவனங்கள், நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிலையம், அனல் மின் நிலையங்கள், சைமா ஜவுளி பூங்கா போன்றவை தொடர்ச்சியாக உள்ள சூழலில் இப்பகுதியில் மட்டும் 13,040 மெ.வா மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சில துவக்கப்பட்டுள்ளன. சில ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கி உள்ளன. 14 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 70 கி.மீ தூரத்தில் வருவதுடன் சேர்த்து இந்த பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய – ரசாயன முதலீட்டு மண்டலமும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வருவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை ‘‘ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை’’ மூலமாகத்தான் கண்டறியமுடியும்.

ஆனால் அரசு இதைச் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டங்கள் குறித்து எந்தவித தகவல்களையும் முழுமையாக இதுவரை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் எவ்விதமான “கருத்தாய்வுக் கூட்டத்தையும்’’ நடத்தவில்லை. ஒரு நிறுவனம் வரும் போது நடத்தப்படும் ‘‘பொது விசாரணை” நடைமுறையும் கைவிடப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்பவர்களுக்கு பொதுமக்களின் கருத்து கேட்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

உப்பளங்களும் பறிபோகும் அபாயம்
அதேபோல கடற்கரையோரம் 1806 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் சிறு சிறு உற்பத்தியாளர்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பங்கேற்புடன் நடந்து வரும் உப்பு தொழிலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உப்புத் துறைக்கு சொந்தமாக நாடு முழுவதும் 61,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பல நூறு ஆண்டுகள் உப்பு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து, 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் “உப்பு வரியை” வாங்க வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் வருகின்ற 2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த நிலங்களையும் திறந்த சந்தையில் ஏலம் விட இருக்கிறது. அதுவும் பெருமுதலாளிகளுக்கு. இந்த போட்டியில் சிறு உற்பத்தியாளர்கள் தொலைந்து போவார்கள்; பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். (மரக்காணத்தில் மட்டும் மூவாயிரம் குடும்பங்கள் இதை நம்பி வாழ்கின்றன.)

மீனவ வாழ்விடங்களின் மீதான தாக்கம்
வரவுள்ள பெரும்பாலான திட்டங்களுக்கு கடற்கரையும் கடல் நீருமே ஆதாரமாக இருந்தாலும், கடற்கரை மக்களுக்கும், கிராமங்களுக்கும் எந்தப் பாதிப்பும் வராது என அரசு கூறுவதில் உண்மை துளியும் இல்லை. இந்த 70 கி.மீ கடற்கரையில் பல துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், ஹைட்ரோகார்பன் கிணறுகள் வருவதற்கான வாய்ப்புள்ள சூழலில் அவற்றின் தாக்கம் ஒட்டுமொத்தமாக அளவிடப்பட வேண்டும், நீண்டகாலம் அலைகள் துறைமுகங்களுடன் உறவாடும் நிலையில், உப்புநீர் சுத்திகரிக்கும் ஆலைகளுடன் நெடுநாள் தொடர்பு ஏற்படும் சூழலில் பிற பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை பலவீனப்படுத்தும். இது இயற்கைச் சீற்றங்களின் போது இன்னும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். சுடுநீர் கலப்பு மற்றும் இரசாயனக் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அலையாத்திக் காடுகள் கடுமையாக பாதிக்கப்படும். நீர் நிலைகள் மற்றும் மீன்வளங்களின் மீது இரசாயனக் கழிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை புரிந்துகொள்ள கடலூர் சிப்காட் அருகில் உள்ள பரவனாறு மற்றும் உப்பனாறின் உதாரணம் போதும். இங்கு 1980களில் 32 வகையான மீன்கள் கிடைத்தன; அது தற்போது 14 வகையினமாக குறைந்துள்ளது. இது சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல; மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனையும்கூட!

அதேபோல தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தும் கடற்கரையோர பகுதி நிலங்களுக்கு எந்த இழப்பீட்டையும் மீனவர்களுக்கு கொடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் பயன்படுத்தும் அந்த நிலம் கடல்சார் வாரியத்தின் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதார உரிமைகள் பறிபோகும். இதற்கு நாகை மாவட்டத்தின் தரங்கம்பாடி மற்றும் கடலூர் மாவட்டத்தின் புதுக்குப்பம் ஆகிய கிராமங்கள் நல்ல உதாரணமாகும். தரங்கம்பாடியின் செட்டிநாடு மின் திட்டம் தனது படகுத்துறையை காரணம் காட்டி மீனவ மக்களை அப்பகுதிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக கடலுக்குச் செல்ல மீனவ மக்கள் 5 கி.மீ சுற்றி மாற்று வழியில் செல்ல வேண்டியுள்ளது. புதுக்குப்பத்தில் ஐ.எல்&எப்.எஸ் அனல் மின் நிலையம் அவர்கள் ஊருக்கு நேராக இருந்த மீன்பிடி தளத்தையும் அவர்கள் படகுகளை நிறுத்தும் இடத்தையும் ஊருக்கு வெளியே வழித்து எறிந்துள்ளது.

அதைவிட முக்கியமாக இந்நிறுவனங்கள் வந்தால் மீன் பிடிக்கும் தொழில் கேள்விக்குறியாகும். உதாரணத்திற்கு தரங்கம்பாடி அருகில் உள்ள பிள்ளைபெருமாள்பேட்டை அனல் மின் நிலையத்தில் கொதிநீரை சேமித்து சூட்டை ஆற்றி பின்பு கடலில் தண்ணீரை விடும் கலன்கள் வேலை செய்வதே இல்லை. கொதிநீர் அப்படியே கடலில் விடப்படுகிறது. இதனால் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிப்பதே அரிதாகிவிட்டது. இதனால் மீனவர்களின் மீன் பிடிதூரம் அதிகமாகும். இது அதிக முதலீட்டைக் கோரும். எளிய படகில் குறிப்பிட்ட தூரத்தில் மீன் பிடித்தவர்கள், பெரிய முதலீடு தேவைப்படும் போது கூலி உழைப்பாளர்களாக மாறும் அவலம் ஏற்படும். இது மீனவ கிராம மக்களின் வாழ்க்கைச் சுழற்சியையே மாற்றும். தூரம் சென்று மீன் பிடிப்பதற்கும் கட்டுப்பாடு உள்ளது. 8 நாட்டிக்கல் மைல் தாண்டி உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது என மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டம் இந்த சூழலில் மீனவர்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும். ஆக ஒட்டுமொத்தமாக கடற்கரைப் பகுதிகளை வளர்ச்சியின் பெயரால் அழித்தொழிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. கடற்கரையை சார்ந்த அனைத்துப் பகுதி மக்களும் ஒன்று திரண்டு போராடாமல் இந்த ஆபத்துகளை தடுத்திட இயலாது. இத்திட்டங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்ற மாயை தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த இருபதாண்டு அனுபவம் என்ன? வருகின்ற நிறுவனங்களில் அப்பகுதியை சார்ந்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கோ, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கோ, மீனவ மக்களுக்கோ வேலை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அதைவிடக்கொடுமை அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் வேலைதேடி அலைவதுதான். எனவே விவசாயத்தையும், கடல்வளத்தையும் பாதுகாப்பது மூலதனத்திற்கு எதிரான போராட்டம் என்பதை உணர்ந்து உழைப்பாளி மக்களை ஒன்றுதிரட்டி களமாடவேண்டிய சூழலுக்கு தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கரம் கோர்க்கவேண்டியது மிக அவசர அவசியக் கடமையாகும்.

கட்டுரையாளர்: மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்), கடலூர்

Leave A Reply

%d bloggers like this: