எட்டு வாசல்களில் ஏழு வாசல்களை அடைத்து விட்டால் தற்கொலைகளை தடுக்க முடியும் என கலெக்டரும், தமிழக அரசும் நினைத்து சுவர் கட்டி வாசல்களை அடைத்த பிறகு தான் 36 வயது அங்கன்வாடி ஊழியர் சுமதி தீக்குளித்து ஒரு வார கால போராட்டத்திற்கு பின் நேற்று மதியம் நெல்லையில் இறந்து போனார்.

தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பது தான் புத்திசாலித்தானம் என்று நாம் நினைக்கிறோம். எல்லாவாற்றையும் உதிர்த்தவர்களால் இதை உணர முடியாது. புளுத்துப் போய்விட்டதா அரசு நிர்வாகம்?. தற்கொலைக்கு காரணம் கலெக்டர் வாசலா?. புரையோடிப் போயிருக்கும் ஊழல். கடைநிலை ஊழியர்களை கொத்தடிமைகளாக பாவிக்கும் அதிகார வர்க்க போக்கு, வெளிப்படையான நிர்வாகமின்மை, புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கையின்மை, அனைத்தையும் கிள்ளுக்கீரையாக நினைப்பது. இதற்கு விலையாக எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம். 

இதோ ஆயிரக்கணக்கான் அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டு நிற்கிறார்கள். சரிபாதிப் பேர் ஆதரவற்றவர்கள். அதிகார வர்க்க நிர்வாக சக்கரத்தில் நசுங்கி நாளையும் பொழுதையும் ரணமாய் கழிப்பவர்கள். 

அதோ அந்தக் கூட்டத்தில் இந்துமதியும், ரோகினியும் நிற்கிறார்கள். சுமதியின் குழந்தைகள். இந்துமதி 12 படிக்கிறார். ரோகினி 9 படிக்கிறார். 2016ல் பஸ் பயணத்தின் போது, கால் தவறி கீழே விழுந்து, பின் தலையில் அடிபட்டு இறந்து போன வெங்கடேசன், இவர்களது தந்தை. இப்போது தாயும் இறந்து விட்டார். மாமாக்களின் ஆதரவில் அவர்கள் சிந்தும் கண்ணீர் இந்த மண்ணில் இன்னொரு துயரச் செடியை நட்டு வைத்திருக்கிறது.

மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் பிறந்த குடும்பத்தில் நாலாவதாய் பிறந்தவர் சுமதி. எங்கள் வீட்டிலேயே கெட்டிக்காரி, தைரியசாலி என்கிறார் அண்ணன் முருகன். பிறகு எப்படி இந்த முடிவை எடுத்தாங்க என்ற போது, டார்ச்சர் சார், அரை மெண்டல், உனக்கு என்ன தெரியு, உனக்கு எவன் வேலை கொடுத்தா, இப்படியே பேசினா என்ன தோழர். ஒரு நாள் மழையோட வந்து, குடும்பத்தோட போயி அந்த அதிகாரியப் பார்க்கப் போனோம். எங்கள பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அங்கன்வாடி வேலைக்கு மூனு லட்சம். கொடுக்காதவங்க கொடுக்கனு. இல்லாதவங்க பணம் கொடுக்க முடியலன்னா, உசுருத்தான கொடுக்கனும் தோழர் என்றார் இன்னொரு அண்ணன் பால்ராஜ். கூடி நிற்கிறது கூட்டம் கலெக்டர் ஆபிசில். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.