கோவை, மார்ச் 21-
அரசுக்கல்லூரி விடுதி மாணவர்களின் வைப்புத்தொகையை பறிக்கும் வேலையில் அரசுக்கல்லூரி நிர்வாகம் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி புதனன்று கல்லூரி முதல்வர் அறையை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் விடுதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. விடுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் சேரும்போது ரூ.8 ஆயிரம் வைப்புதொகையாக செலுத்தியுள்ளனர். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் படித்து முடித்து செல்லும் நிலையில் அவர்கள் கட்டிய வைப்புத் தொகையில் ரூ.3 ஆயிரம் மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து புதனன்று விடுதி மாணவர்கள் கல்லூரியின் முதல்வர் நளினியை முற்றுகையிட்டனர். அப்போது, இதுதொடர்பாக விசாரித்து உரிய முடிவு சொல்வதாக கல்லூரி முதல்வர் உறுதியளித்தார். இதனையடுத்து அனைத்து மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், விடுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. தரமான உணவும் வழங்கப்படுவதில்லை. மேலும், விடுதியில் மூட்டை பூச்சி தொல்லையால் நாங்களே ஒவ்வொருவரும் ரூ.200 சொந்த பணத்தை செலவு செய்து பெயிண்டிங் செய்துள்ளோம். இந்நிலையில் அறையின் பராமரிப்புக்கு என எங்கள் வைப்புத் தொகையை பறிக்க கல்லூரி நிர்வாகம் முற்படுகிறது என குற்றம்சாட்டினர்.

Leave A Reply