•குழந்தைகளின் இதய அறைக்குள் வயதுவந்த நபர்களின் இதயங்களை பொருத்தியதன் மூலம் ரஷ்யாவைச் சேர்ந்த 8 வயதான ரோமன் என்ற சிறுவனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயதாகும் சிறீ சுப்ரியாவும் உயிர்பிழைத்துள்ளனர்.

ரஷ்ய சிறுவனும் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமியும் இதய செயல் இழப்பால் மரணத்தின் எல்லையில் இருந்தனர். அவர்களுக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்தாவிடில் அவர்கள் உயிரிழக்கவேண்டிய இக்கட்டான நிலையில் போர்டீஸ் மலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இசிஎம்ஓ என்ற இதய மற்றும் சுவாசத்திற்கான உயிர்காப்பு ஆதரவு சாதனத்தின் உதவியோடு வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களது வயது மற்றும் இதயத்தின் அளவிற்கு பொருத்தமான இதயங்கள் கிடைக்காத காரணத்தால் மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குநர் கேஆர். பாலகிருஷ்ணன், தீவிர சிகிச்சை மற்றும் இதய மயக்கவியல் துறையின் தலைவர் டாக்டர். சுரேஷ்ராவ் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு இரு குழந்தைகளுக்கும் இரு வயதுவந்த நபர்களின் இதயங்களை பொருத்தும் பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

ரஷ்ய சிறுவன் ரோமனுக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற 12 வயது சிறுமி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியும் சிக்கலான இதய மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் இருவருக்கும் சாலைவிபத்தில் உயிரிழந்த இரு வயதுவந்த நபர்களின் இதயம் பொருத்தப்பட்டது. பின்னர் இருவருக்கும் புதிய இதயம் சுயமாகவே ரத்தத்தை பம்ப் செய்யத் தொடங்கியது என்று டாக்டர். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை மற்றும் இதய மயக்கவியல் துறையின் தலைவர் டாக்டர். சுரேஷ் ராவ் இச்சாதனை குறித்து கூறுகையில் “நீண்ட நேரம் நீடித்த மாரடைப்புகளுக்கு பிறகு எக்மோ சாதனத்தால் 3 முறை இதயத்திற்கு சுவாசம் அளிக்கப்பட்டு ஒரு நோயாளி மீண்டு வந்தது உலகில் இதுவே முதல் முறை என்றார். ஒரு வயதுவந்த நபரின் இதயத்தை ஒரு குழந்தை நோயாளிக்கு சரியாக பொருத்துவது என்பது மிக அரிதானதாகும். சிகிச்சைக்கு பின் ரஷ்ய சிறுவனும் தமிழக சிறுமியும் வேகமாக குணமடைந்து வருகிறார்கள் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.