மூலக்கொத்தளத்திற்குள் நுழைவதற்கு முன்னர் இரண்டு சமாச்சாரங்களை நினைவு கூற வேண்டியுள்ளது. முதல் நிகழ்வு 1758 டிசம்பர் 14 முதல் 1759 பிப்ரவரி 16 வரை லாலி பிரபுவின் தலைமையிலான பிரெஞ்சு படைகள் சென்னப்பட்டணத்தை தங்களின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

முற்றுகை முடிவுற்ற பின்னர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த ராணுவத் துறையின் பொறியாளர் 1759 மார்ச் 12 அன்று கவர்னருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தார். அதில் (இப்போதைய உயர்நீதிமன்ற வளாகத்தில்) கோட்டைக்கு அருகாமையில் உள்ள கல்லறை பாதுகாப்பு வளையத்திற்கு ஏற்றதல்ல என்றும் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தேவாலய நிர்வாகக் குழுவினர் 1760 ஜனவரி 29ல் கல்லறையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததன் பேரில் மாற்று இடமொன்றை வழங்கிட கோரிக்கை விடுத்தனர். பின்னர் எலிஹூ ஏல் இன்னும் ஓரிருவரின் கல்லறை அங்கேயே விடப்பட்டு (இவை இன்னமும் நீதிமன்ற வளாகத்தில் உள்ளது) மற்றவை யாவும் கோட்டைக்குள் இடம் பெயர்ந்ததோடு 1652 முதல் 1755 வரை அடக்கம் செய்யப்பட்ட 98 பேரின் கல்லறைக் கற்களையும் கையால் நகல் எடுத்து மரித்தோர் பற்றிய விவரணங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டது. 1880ல் மதராஸ் ரெவின்யூ துறையினர் இதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னரே இந்தப் பிராந்தியத்தில் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் தடம் பதித்தது பற்றியது. பழவேற்காட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த டச்சுக்காரர்கள் கல்லறையொன்றை உருவாக்கினர். 1795 வரையில் மரித்தோர் அடக்கம் செய்யப்பட்ட இந்த டச்சுக் கல்லறை இன்றைய தினம் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் வனப்புடன் இருந்து வருகிறது.

கல்லறை என்பது மரித்தோரை அடக்கம் செய்வதோடு முடிந்து விடக்கூடியதல்ல. மேலும் அது உணர்வு சம்பந்தப்பட்டதோடும் நின்றுவிடுவதில்லை. வரலாறு, சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய கூறுகளையும் உள்ளடக்கியது என்பதினால்தான் ஆவணப்படுத்துவதும், தொல்துறை பாதுகாப்பதும் நிகழ்ந்திருக்கிறது.

மதராஸ் பட்டணத்தில் உள்ளூர் மக்களைப் பொருத்த மட்டில் 1639க்கு முன்னர் இடுகாடும் சுடுகாடும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை. அல்லது அதுபற்றிய தெள்ளத் தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. 1652ல் வலங்கை இடங்கை பிரச்னையின் போதுதான் மரண ஊர்வலப் பாதை பற்றிய குறிப்புகளை அறிய முடிகிறது.

கோட்டையில் அன்றைய தினம் பிரசிடெண்ட்டாக இருந்த பேக்கர் தலையீட்டின் காரணமாக சமரசம் உருவாகியது. கோட்டையின் வடமேற்கில் உள்ள போர்ச்சுக்கீசிய தேவாலயத்திற்கு அருகில் இந்துக்களின் கல்லறை இருந்ததை சமரச ஆவணம் மூலம் அறிய முடிகிறது. ஆயின் அதைக் குறிப்பிட்டுக் காட்டும் வகையிலான வேறு நிலப்படங்களோ அது தொடர்பான ஆவணங்களோ கிடையாது.

1700களில்தான் உள்ளூர்வாசிகள், முஸல்மான்கள் ஆகியோரை அடக்கம் செய்வதற்கும் எரியூட்டுவதற்கும் ஏற்ற வகையில் மூலக்கொத்தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெயரிலிருந்தே பட்டணத்திற்குட்பட்ட ஒரு முனை என்பதை அறியலாம். பட்டணத்தில் ஏன் இந்தியாவிலேயே முறைப்படுத்தப்பட்ட மிக தொன்மைமிக்க மயானம் என்றால் மூலக்கொத்தளமாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட (நூற்றைம்பது ஆண்டுகள் என்று சொல்வது தவறு) மயானம் இன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

ஏற்கனவே பழமைமிக்க மூலக்கொத்தளம், காசிமேடு, ஓட்டேரி, வேலங்காடு ஆகிய இடுகாடுகளில் இருந்த கல்லறைக்கற்களை சென்னை மாநகராட்சி இடித்துத் தள்ளியது. சென்னை நகர வரலாற்றில் மட்டுமின்றி, மாகாண வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றலை கொண்ட மகத்தான மனிதர்களின் கல்லறைகள் சென்னை மாநகராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் மேயராக இருந்தபோது இடித்துத் தள்ளப்பட்டது. இதை எளிதாக கடந்து போய்விடமுடியாது.

கல்லறைக் கற்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்த வகையில் சமூக வரலாற்றை, மொழியின் பயன்பாட்டை, சாதிக்கூறுகளை, மரித்தோரின் பங்காற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பதை சுலபமாகவே எவரும் உணர முடியும். தவிர இடுகாட்டின் அமைப்பும் சாதிய நெறிமுறைகளை, மரபில் ஊறிப்போன வழக்கங்களை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. ஆயின் சமூகம், மொழி பற்றிய ஒரு விரிவான கண்ணோட்டம் இல்லாது வெற்றுப் பழம்பெருமையில் மூழ்கித்திளைத்து கொண்டிருக்கக்கூடிய சக்திகள் மாகாணத்தில் மட்டுமின்றி மாநகராட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதன் விளைவு இடுகாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது.

இட நெருக்கடியை காரணமாக்கிக் கொண்டு ஏற்கனவே இருந்த கல்லறைக் கற்கள் யாவுமே அகற்றப்பட்டதோடன்றி புதிய கற்களை நிறுவ மாநகராட்சி இன்றைய தினம் அனுமதிப்பதில்லை. இருப்பினும் 1990க்குப் பின் நிறுவப்பட்ட ஒரு சிலவற்றை மட்டுமே ஓரிரு மயானங்களில் காண முடிகிறது. விரிவான அளவில் அமைந்த மூலக்கொத்தளம், இந்து மயானம்-கிருத்துவக் கல்லறை- இஸ்லாமியருக்கான கபர்ஸ்தான் ஆகிய மூன்றையும் ஒரே வளாகத்தில் கொண்டிருக்கக்கூடிய காசிமேடு, பழமைமிக்க ஓட்டேரி ஆகிய மூன்றுமே நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன.

கல்லறைக் கற்கள் அகற்றம் என்பது முதல் கட்டத்தில் நடைபெற்றதிலும் அடுத்த கட்டத்தில் இட நெருக்கடி என்ற காரணத்தின் பேரில் மரித்தோரை புதைக்கக்கூடிய வழக்கத்தை கட்டுப்படுத்தி எரியூட்டப்படுவதை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் நோக்கமொன்று இருந்து வந்தது இன்றைய தினம் அம்பலமாகிவிட்டது. ஏற்கனவே ஓட்டேரி மயானம் சுருங்கி பண்டைய நினைவிடங்கள் அகற்றப்பட்டு அடுக்கு மாடி வளாகம் உருப்பெற்று விட்டது. இதில் தப்பிப் பிழைத்தவர் இரட்டை மலையாரும் அவரது துணைவியாரும் மட்டுமே.

மூலக்கொத்தள மயானத்தை ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்றே கூற முடியும். ஏற்கனவே கூறப்பட்டத்தைப் போன்று அது சமூக பண்பாட்டியல் கூறுகளை உள்ளடக்கியது. ஒரு கட்டத்தில் சவ அடக்கமும் சாதி அடிப்படையில் ஒரே வளாகத்தில் நடைபெற்று வந்திருப்பதன் வெளிப்பாடாகவும் உள்ளது. ரயில் பாதைக்கும் ஏற்கனவே உருவான குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கும் இடமளித்தது போக சுருங்கிக் கிடக்கும் இம்மயானத்தை மேலும் சுருக்கி அடுத்த கட்டத்தில் அடுக்கு மாடி வளாகத்திற்கு இடமளிக்கும் கருத்தை வெளிப்படையாக அறிய முடிகிறது.

இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டது இம்மயானத்தில்தான். அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுச் சின்னமொன்றை கட்டிட 1940 மே 5 அன்று தந்தை பெரியார் தலைமையில் விழாவொன்று நடைபெற்றிருக்கிறது.

நாம் இன்று கட்ட ஆரம்பித்திருக்கும் வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடமானது அதைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்மையிலேயே அவனது அடிமை வாழ்வும் சமூகத்தில் தான் அமிழ்ந்து கிடக்கும் சூழ்ச்சியும் நினைவிற்கு வந்து அதைத் தகர்த்தெறிய உடனே வீரனாக விளங்குவான் என்றுரைத்ததோடு நிற்காமல் சாதிவாரி புதைக்கும் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்பதைப் பற்றியும் மிக விளக்கமாக உரை நிகழ்த்தி பணியைத் துவக்கி வைத்தார். பின்னர் அவரே 1945 ஏப்ரல் 2ம் நாள் திறந்தும் வைத்திருக்கிறார்.

மொழிக்காக உயிர் நீத்த வீரர்கள் மட்டுமின்றி சமூக அவலத்திற்காக போராடிய பெரியாரையும், அவர் விடுத்த அறைகூவலையும் நினைவுபடுத்தக்கூடிய இத்தகைய நினைவுச் சின்னங்கள் இன்றைய தினம் மாறிய சூழலில் தேவையில்லை என்று புறந்தள்ளக்கூடிய ஆணவப்போக்கின் வெளிப்பாடாகவே மூலக்கொத்தள மயானம் பற்றிய அரசின் அறிவிப்பு உணர்த்துகிறது.

வெறும் மயானப் பிரச்னையாக கருதாது ஆழமான மரபுகளை கொண்டிருப்பதோடு புதிய பாதையில் பயணத்தை துவக்கியுள்ள சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக இதைக் கொள்கையில்தான் இத்தகைய முயற்சிகளை நம்மால் முளையிலேயே வெட்டிச் சாய்க்க முடியும்.

  •  ராமச்சந்திர வைத்தியநாத்

Leave a Reply

You must be logged in to post a comment.