புதுதில்லி, மார்ச் 21-

ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கார் என்னுமிடத்தில் ‘பசுப்பாதுகாப்புக்குழு’ என்ற பெயரில் இந்து மதவெறியர்கள்  இறைச்சி வியாபாரம் செய்திடும் அலிமுதீன் அன்சாரி என்னும் முஸ்லீம் ஒருவரை சென்ற ஆண்டு  படுகொலைசெய்த வழக்கில், ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள விரைவுநீதிமன்ற அமர்வுநீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்களில் வயதுவந்த 11 பேர்களுக்கும் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்புரைத்தார். வயது நிறைவடையாத ஒருவருக்கு மட்டும் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் அலிமுதீன் அன்சாரி தன் காரில் மாட்டுக்கறி கொண்டு சென்றார் என்று பசுப்பாதுகாப்புக் குழு என்கிற பெயரில் செயல்பட்ட இந்துத்துவா மதவெறியர்களால் கொல்லப்பட்டார். அவர் கறியை எடுத்துச்சென்ற காரும் எரித்து சாம்பலாக்கப்பட்டது.

மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் தங்கள் இந்துத்துவா கொள்கையைக் கொடூரமாகப் பின்பற்ற வேண்டும் என்ற இழிநோக்கத்துடன் மாநிலங்களில் ‘பசுப்பாதுகாப்புக்குழு’ என்ற தனியார் குண்டர்படையை அமைத்துக்கொண்டு, முஸ்லீம்களையும், தலித்துகளையும் கொன்று குவித்து வருகிறது. இதுவரை நாடு முழுதும் 2010க்கும் 2017க்கும் இடையே,  இவ்வாறு கொல்லப்பட்ட 28 பேர்களில் 24 பேர் முஸ்லீம்கள்.

இதில் நாட்டிலேயே  முதன்முறையாக இப்போதுதான் இவ்வெறியர்களுக்கு எதிராக, இவர்களின் கொடூரமான செயலை ஒரு திட்டமிட்ட சதி என்று ஏற்றுக்கொண்டு இதில் ஈடுபட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து ஒரு தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்குரைஞர், இவர்களுக்கு எதுவும் நடந்துவிடாது. இது கீழமை நீதிமன்ற தீர்ப்புதான். உடனடியாக இவர்கள் மேல்முறையீடு செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

ராம்கார் மாவட்ட பாஜக தலைவரான பப்பு பானர்ஜி இதுகுறித்து செய்தியாளர்களிடையே கூறுகையில், “இது சரியான தீர்ப்பு அல்ல, அனைவரும் அப்பாவிகள், மேலும் இதுவே முடிவான நீதிமன்றம் கிடையாது. இத்தீர்ப்பை நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,” என்று கூறியிருக்கிறார்.

இறந்த அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், இத்தீர்ப்புக்குப்பின்னர் மதவெறியர்கள் எங்களை நிம்மதியாக வாழவிடுவார்களா என்று தெரியவில்லை, பயந்து பயந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று செய்தியாளர்களிடையே கூறினார்கள்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.