பாலேஸ்வரம் தனியார் கருணை இல்ல நிர்வாகி மீது சட்டவிரோதமாக 9 குழந்தைகளை தங்க வைத்திருப்பதாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பாலேஸ்வரம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த சாகும் தருவாயில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் கருணை இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தில் கடந்த 7 ஆண்டுகளாக முதியோர்களை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கடந்த மாதம் கருணை இல்ல வாகனத்தில் சடலத்துடன் இரு முதியவர்களை ஏற்றிச்சென்றபோது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்தில் வாகனத்தையும் அதை ஓட்டிவந்தவரையும் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், சமூக நலத்துறையினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் நான்கு பிரிவுகளாக ஆய்வு நடத்தினர். பின்னர் அந்த கருணை இல்லத்திலிருந்த 256 முதியோரை வெவ்வேறு அரசு இல்லங்கள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் ஆதரவற்றோர் கருணை இல்லங்களுக்கு மாற்றினர். இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து 6 பெண் குழந்தைகள் 3 ஆண் குழந்தைகள் என 9 குழந்தைகள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் ஜகுருதீன் தலைமையில் அதிகாரிகள் அங்குள்ள குழந்தைகளை மீட்கச் சென்றனர். ஆனால் அங்குள்ள குழந்தைகளை கருணை இல்ல நிர்வாகிகள் தரமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து. மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஜகுருதீன் உள்ளிட்ட அதிகாரிகள் சாலவாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் மீது சட்டவிரோதமாக குழந்தைகளை வைத்திருந்தது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: