ஓமலூர், மார்ச் 21-
சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜோதிடர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் ஆவேச போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் அப்பகுதியில் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் ஜோதிடம் பார்க்க நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளனர். அப்போது, மகளின் ஜாதகத்தில் தோசங்கள் இருப்பதாக கூறி அவரை மட்டும் தனியாக பூஜை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அதுகுறித்து வெளியே கூறினார் தனது மந்திர சக்தியால் குடும்பத்தையே பழிவாங்கி விடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதன்பின்னர் பூஜை முடிந்துவிட்டதாக கூறி அந்த பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டு நான்கு நாட்களுக்கு பின் வருமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் தங்களது சொந்த ஊருக்கும் திரும்பும் வழியில் தனது நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தாரமங்கலம் காவல்நிலையில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜோதிடர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மேலும் பல பெண்களிடம் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கிடையே, இளம்பெண்னுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து அறிந்த அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் திரண்டனர். அப்போது, கடுமையான சட்டபிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட ஜோதிடர் செல்வத்தை ஓமலூர் நீதிமன்றத்தில் காவலர்கள் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது நீதிமன்ற வாயிலில் ஜோதிடர் செல்வம் அழைத்து வரப்பட்ட காரை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, துணை நிர்வாகி ராஜாத்தி மற்றும் சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: