திருப்பூர், மார்ச் 21-
திருப்பூரில் ஒப்பந்த ஊழியராக 19 ஆண்டுகளாக பணியாற்றும் தன்னை பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால். திருப்பூர் எஸ்.வி காலனிக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 19 ஆண்டுகளாக மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வரும் தன்னை நிரந்தர பணியாளராக மாற்றக்கோரி பலமுறை உயரதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித உத்தரவாதமும் அதிகாரிகளால் அளிக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜகோபால் செவ்வாயன்று மாலை எஸ்.வி.காலனி பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து அவரை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: