==== ஜெ.பொன்மாறன் ===                                                                                                                                                           1993ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47ஆவது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. இன்றைக்கும் உலகில் அனைவருக்கும் இயற்கை பொதுவாக கொடுத்த ஒரு கொடை தண்ணீர். மழை நீரை தேக்கிவைத்து நீர் நிலைகளை சரியாக பராமரிக்காமல் விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இயற்கை வளங்களை பாதுகாப்பதை மறுந்து அதற்கு மாறாக பல்வேறு செயல்களில் மனித இனம் ஈடுபடுவதாலும் தான் பற்றாக்குறை ஏற்படுகின்றது.முந்தைய காலத்தில் கோடைக் காலம் துவங்கிவிட்டால் வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். வழியில் செல்வோ‌ர் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்‌வார்‌க‌ள். இன்றைக்கும் வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால் அவை நீர் நிரம்பி அல்ல, நீர் நிரப்ப எப்போதாவது வரும் குழாய் நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை.எனவேதான் நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். நாம் வாழும் பூமியின் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்புத்தான். இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்தான். இதில் நல்லநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான். அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீதி நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான்.
எனவே 30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர்தான் உயிராதாரம்.

இந்த நீரைத்தான் மனிதனின் அனைத்துத் தேவைகளுக்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்கும் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம். அவையும் இன்றைக்கு சரியான மழையில்லாததாலும் அரசு நீர் நிலைகளை பாரமரிக்காமல் விட்டதாலும் தண்ணீர் தேங்க வழியின்றி தூர்ந்துபோயுள்ளது.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றியது. ஆனால் அதற்கு முந்தைய 2015-ஆம் ஆண்டில் பெய்த மழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் கூறினார்கள். ஆனால் பெய்த மழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்க வழியில்லை என்பதே உண்மை. ஏன் என்றால் தண்ணீர் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளே.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் பாய்ந்து நீர் மாசு ஏற்படும் வகையிலும் தான் உள்ளன.

தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று நீரியல் நிபுணர்களும் தன்னார்வலர்களும் கூறியும் போராடியும் வருகின்றனர்.

மேலும் அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அதை முறையாக பயன்படுத்தாததால் நீர் நிலைகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகதான் உள்ளது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் வாழும் இந்திய மக்களுக்கு சுத்தமான குடிநீர் என்பது அதிகம் கிடைப்பதில்லை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகம் இன்றும் தண்ணீருக்காக அருகில் உள்ள கேரளா,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நம்பியே உள்ளது. மேலும் தமிழகத்தில் உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை அன்னிய குளிர்பான நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்திடம் அந்த நீரை அருகில் உள்ள பிற மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு சரியான திட்டமிடல் இல்லை.

உலக தண்ணீர் தினம் என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது.
தண்ணீர் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரம் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளவேண்டும், தமிழ்நாட்டில் வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரை இந்த தண்ணீர் தினத்தில் சேமித்திட அரசும் மக்களும் நினைக்கவேண்டும்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.