ஈரோடு, மார்ச் 21-
ரயில்வே ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு ரயில்வே ஊழியர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

ஈரோடு ரயில்வே காலனியில் சிஎஸ்ஐ புனித பீட்டர் தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தைவிடக் கூடுதலான நிலத்தை ஆலய நிர்வாகிகள் எடுத்துக் கொண்டதாக கூறி சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தேவாலயத்தின் ஒரு பகுதியை சுவர் வைத்து அடைத்துள்ளனர். ஆனால், இதன் விரிவாக்க பணிகள் அனைத்தும் ஒவ்வொரு கட்டத்திலும் ரயில்வே கோட்ட மேலாளரின் அனுமதி பெற்றுதான் கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே வழிபாட்டுத்தலங்களில் பொறுப்பில் இருந்த ரயில்வே ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பாக, தேவாலயத்தின் நிர்வாகக்குழுவில் இருந்த நான்கு ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்ட ஊழியர்களின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தட்சிண ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் (டிஆர்இயு) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் புதனன்று ஈரோடு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், சேலம் கோட்ட மண்டல தொழிலாளர் அதிகாரிகள், டிஆர்இயு மண்டல செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட நான்கு ஊழியர்களையும் மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தனர்.ரயில்வே ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற்றதால் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நன்றி அறிவிப்பு கூட்டமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு ஈரோடு டிஆர்இயு உதவித் தலைவர் எஸ்.சௌகத் அலிகான் தலைமை வகித்தார். சேலம் கோட்ட உதவித்தலைவர் கே.சுப்பிரமணி, உதவிச் செயலாளர் சி.முருகேசன், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி உட்பட பலர் பங்கேற்று பேசினர். இதில் ரயில்வே ஊழியர்கள் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.