===செ.முத்துக்கண்ணன்====                                                                                                   “ எழுக அடிமையாயிருக்க
விரும்பாதவர் அனைவரும் எழுக !
நமது சதையும் ரத்தமும் சேர்ந்து
பெரும் சுவர் ஒன்றை எழுப்பும்”
-என்ற நீஹ் ஏர் என்னும் சீன கவிஞனின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுத்த புரட்சிப் பயணம் சீன நெடும்பயணம்.அதன் எழுச்சியே மக்கள் புரட்சியை உருவாக்கியதெனில் வரலாற்றிலிருந்து பாடம் கற்போம்.

1946 பிப்ரவரி மாதம் 18ம் தேதி “ தல்வார்” என்னும் பயிற்சிக் கப்பலில் புரட்சித் தீ மூண்டது. சில மணி நேரத்தில் ராயல் இந்திய கப்பற்படை முழுவதிலும் காட்டுத் தீ போல் பரவியது. இந்தத் தீயைக் கண்டு பயந்த வெள்ளை ஏகாதிபத்தியம் ஒரு புறம் என்றால், இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிச, சக்திகளின் தோல்வியை செங்கொடி உறுதி செய்து கொடியேற்றியது. மறுபுறம் இதனால் உலகின் நிலப்பரப்பில் சிவப்பின் அடர்த்தி அதிகமானது. மறுமுனையில் ஆசிய நாடுகளில் புரட்சியின் களம் சூடேறிக்கொண்டிருந்தது. சீனாவில் மாவோவின் தலைமையிலும், வியட்நாமில் ஹோசிமின் தலைமையிலும் புரட்சியின் வேகத்தை துரிதப்படுத்திக்கொண்டு இருந்தனர். இந்தச் சூழலில்தான் இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சியைக் கண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிரட்சி கொள்ள ஆரம்பித்தது.

“பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசும் போது 1920-லோ, 1930-லோ, 1940-லோ இருந்த தட்ப வெப்பநிலை இப்போது இந்தியாவில் இல்லை. இன்று முற்றிலும் மாறுப்பட்ட நிலை உள்ளது. எனவே மாறுபட்ட அணுகுமுறை தேவை” என்று கூறி, இறங்கி வந்து அதிகார மாற்றம் பற்றிப் பேச ஒரு குழுவை அனுப்பினார். அந்த அளவிற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மிரட்டிப் பணிய வைத்த இயக்கம் கப்பற்படை எழுச்சி ஆகும்.

கிழக்கிந்திய கம்பெனிக்கெதிரான போராட்டத்தின் உச்சமாக நடந்த முதலாம் சுதந்திரப்போராட்டத்திற்குப் பிறகு, 1858ல் இந்தியாவில் பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் அதற்கெதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றனர். தடியடி, துப்பாக்கிச் சூடு, உயிர்ப் பலி என தியாகம் செய்தனர். அப்போது எல்லாம் ஆட்சி மாற்றத்தைப் பற்றி சிந்திக்காத வெள்ளை அரசு கப்பற்படை எழுச்சியைக் கண்டு நடுங்கியது.

ஏனெனில் சம காலத்தில் வெள்ளை அரசின் முக்கியக் கேந்திரமாக விளங்கிய இரயில்வேயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வங்கத்து விவசாயிகளின் புகழ் பெற்ற போராட்டமான “தெபாகா போராட்டம்” விளைச்சலில் முக்கால் பங்கு விவசாயிகளுக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கான இயக்கம், தெலுங்கானாவில் துவங்கிய போராட்டம், மராட்டியத்தில் நடைபெற்ற “வொர்லி ஆதிவாசிகள்” எழுச்சிப் போராட்டம், திருவாங்கூர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு மன்னனையும் திவானையும் எதிர்த்த புன்னப்புரா’ வயலார் மக்களின் ஆயுதமேந்திய எழுச்சி… என புரட்சிகரமான இயக்கங்கள் இக்காலத்தில் தான் நடைபெற்றன.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 19ம் நூற்றாண்டில் நடந்த விவசாயிகளின் போராட்டம்- பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இரத்தம் சிந்திய இயக்கம் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. இப்போராட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மட்டுமல்ல; ஜமீன்தார்கள், கந்துவட்டிக்காரர்கள், கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகள், ஐரோப்பியர்கள், அரசு அதிகாரிகள் என ஐந்து எதிரிகளை எதிர்த்து நடைபெற்றுள்ளன. 1820ல் கோல் ஆதிவாசிகள் போராட்டம், 1855ல் சாந்தால் விவசாயிகள் போராட்டம், 1866ல் அவுரி விவசாயிகள் போராட்டம், 1872ல் வங்காளத்தில் பாப்னா போராட்டம், 1879ல் ரம்பா ஆதிவாசிகள் போராட்டம், 1895 முண்டா ஆதிவாசிகள் போராட்டம் என இவற்றில் எல்லாம் உயிரை இழந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் இரத்தத்தில்தான் இந்திய சுதந்திரப் பயிர் வளர்ந்தது.

வரலாற்றின் சக்கரம் சுழல ஆரம்பித்துள்ளது. இன்று மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரம் என்பது நவீன தராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்கவும், ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் தீவிர வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை முழு அளவில் முன்னெடுக்கவும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பை அச்சுறுத்துவதோடு, சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், ஆதிவாசிகள் உள்ளிட்டு உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடுப்பதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கேந்திர ரீதியான கூட்டணியை வலுப்படுத்தி சுயசார்புத் தன்மையை பின்னுக்குத் தள்ளுவது, அரசியலமைப்பு நிறுவனங்களையும், ஜனநாயக உரிமைகளையும் சீர்குலைப்பது என்ற எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக பாஜக அரசு உள்ளது.

கிராமப்புறங்களில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்துதல் தீவிரமடைகிறது. நிலச் சீர்திருத்த கொள்கை, சாகுபடி செலவு, விளைபொருள்களின் கொள்முதல் விலை, கடன், பயிர் காப்பீடு, உணவு பாதுகாப்பு மற்றும் விலங்கு வளங்கள் கடுமையாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம், அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள்; மறுபுறம், விளைபொருட்களுக்கு நியாயமற்ற ஆதார விலை காரணமாக விவசாயிகளின் தற்கொலை சாவுகள் அதிகரித்து வருகின்றன.

சர்வதேச விலைகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப இந்திய விவசாயச் சந்தையை கொண்டு வந்ததும், உலக வர்த்தக அமைப்பு குறைந்தபட்ச ஆதார விலை என்பதை கைவிட இந்திய அரசை நிர்பந்திக்கிறது. சாந்தகுமார் கமிஷன் அறிக்கை இந்திய உணவுக் கழகத்தை தனியார்மயமாக்கவும், அரசின் கொள்முதலை நிறுத்தவும், குறைந்தபட்ச ஆதாரவிலை அல்லது போனசை அறிவிக்க மாநில அரசுகளை தடுக்கவும் நிர்ப்பந்திக்கவும், ஆணையிடவும் செய்தது. இவற்றின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட்களின் நலன்கள் ஒளிந்துள்ளன.

விவசாயிகளின் பேரெழுச்சி
இதனை எதிர்த்த போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நடைபெற்றுவரும் நிலையில் விவசாயிகளின் கூட்டுப்போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் முதல்கட்டமாக விவசாயிகளின் 18 நாள் வேலைநிறுத்தப் போராட்டமும், மத்தியப்பிரதேசத்தின் மன்சூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களும், ஜார்கண்டில் சாந்தல் பர்கானாஸ் மற்றும் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டங்களில் திருத்தங்களை எதிர்த்த போராட்டமும், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் ஆதரவோடு சிக்ரா மாவட்டத்தின் அனைத்து கிராமங்களின் விவசாயிகள் நடத்திய முற்றுகை மற்றும் காத்திருப்பு போராட்டம் விவசாயிகளே ஊரடங்கு அறிவித்து நடக்கும் நிலைக்கு எழுச்சியோடு நடைபெற்றது. 2017 நவம்பர் 20-21 தேதிகளில் 187 அமைப்புகளின் கூட்டு மேடை மூலம் தலைநகர் தில்லியில் விவசாய பாராளுமன்றம் நடத்தப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் விவசாயிகள் என்ற அளவில் பெருந்தீயாய் மூண்டெழுந்தது கோரிக்கையின் நியாயம். முன்வரிசையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் செங்கொடி ஏந்தி முன்னின்றது.

தொழிலாளர்களின் புரட்சிகர அணிவகுப்பு
இதே காலத்தில் நகர்புறங்களில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டங்கள் பலமிகுந்ததாக நடைபெற்றது. தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் நடந்த செப் 2 வேலைநிறுத்தத்தில் சுமார் 12 கோடி பேர் பங்கேற்றது நவீன தாரளமயக்கொள்கைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். தனியார் மயத்திற்கு எதிராக வங்கி ஊழியர்கள், உருக்காலை ஊழியர்கள், தொலைதொடர்பு ஊழியர்கள் என கேந்திரமான அனைத்து துறைகளிலும் நடைபெற்றது. நவம்பர் 9-11 வரை இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே பல லட்சம் பேர் காத்திருப்பு போராட்டத்தை மூன்று நாட்கள் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் முன்வரிசையிலும் இந்திய தொழிற்சங்க மையம் செங்கொடி ஏந்தி முன்னின்றது.

மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தி பெருகி வருகின்றது. அது பல்வேறு பிரிவினரின் போராட்டங்களின் மூலம் வெளிப்பட்டு வருகின்றது. இத்தருணத்தில் தான் ஆளும் வர்க்கங்களிடையே ஆன முரண்பாடுகளும், தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆகியோருடனுனான முரண்பாடுகளும் வளர்ந்துள்ளன. இதை பயன்படுத்திக்கொண்டு பெருமுதலாளித்துவ நிலபிரபுத்துவ ஆதிக்கத்தை பலவீனமடையச் செய்யும் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணமிது.

மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், இராஜஸ்தான், மகாராஷ்டிரா வழியில் இன்று உத்தரப்பிரதேச விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், ஆதிவாசிகள், தலித்துகள் என போராட்டம் அலைஅலையாய் ஆர்ப்பரித்து எழ ஆரம்பித்துள்ளது. உழைக்கும் மக்களின் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பதில் 1946 பம்பாய் எழுச்சியின் போது நகர்ப்புற தொழிலாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், பெண்களும், இளைஞர்களும், மாணவர்களும் எப்படி கப்பற்படையினரின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு உதவினார்களோ; எந்த செங்கொடி அன்று கப்பல்களில் ஏற்றப்பட்டதோ, அதே செங்கொடி 72 ஆண்டுகளுக்குப் பின்னால் பத்தாயிரம் பேரில் ஆரம்பித்து பல பத்தாயிரம் பேர் செங்கொடியும், சிவப்புக் குல்லாயும் அணிந்து அனைத்து மக்களின் அரவணைப்போடு மும்பையில் கோரிக்கையின் உச்சத்தை ஆளும் வர்க்கத்திடம் வென்றெடுத்தனர்.

நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இழந்துள்ளனர். பாஜக அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை. விவசாயிகளது விருப்பத்திற்கு மாறாக அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதை கைவிட வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்; எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பொதுவிநியோக முறையினை நிறுத்தாமல் வழங்க வேண்டும்; கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று போராடி, தோற்று, சுருக்குக் கயிற்றை ஏந்திய விவசாயிகளை அணி திரட்டிப் போராடி இன்று வெற்றி பெற்றுள்ளனர்.இந்த நம்பிக்கை வெளிச்சம் இந்த விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கே ஒளிக் கீற்றாய் காட்சி அளிக்கிறது. 

கால்தோல் கிழிய நடந்த 64 வயது சக்குபாயில் இருந்து ரூ.70 வயது நிரம்பிய முன்னாபாய் பன்வாரிலிருந்து. ஒரு வயது மட்டுமே நிரம்பிய ராதிகா வரை ஆயிரமாயிரமாய்… வானமே கூரையாய், சாலையே படுக்கையாய் இரவெல்லாம் ஆடல், பாடல்கள் மூலம் சேர்ந்திசைத்து தங்களை புதுப்பித்துக்கொண்டு, மக்கள் கொடுத்த உணவுகளை புசித்தபடி 180 கிலோ மீட்டரை 6 நாட்களில் கடந்து… வாடிய பயிரை கண்டு வாடி வதங்கி மொத்த விவசாய வர்க்கத்திற்காக செங்கொடி ஏந்தி புதிய பூபாளத்தை இசைத்தனர். தற்கொலை என்பது தீர்வல்ல, ஒன்றுபட்ட போராட்டமே வெற்றியைத் தரும் என்ற வர்க்கப் போராட்டமே இன்று முன்னெழுந்து நிற்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.