திருப்பூர், மார்ச் 21 –
சாயக்கழிவு நீரை சுத்திகரிக்கும் பூஜ்ய கழிவு மறுசுழற்சி தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் ஏற்படுத்திட வேண்டும் என திருப்பூர் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனை புதனன்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தில்லியில் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் சாயப்பட்டறைத் தொழில் துறை பூஜ்ய கழிவு மறுசுழற்சி தொழில்நுட்பத்தை ரூ.1070 கோடி செலவில் அமல்படுத்தியுள்ளது. இதற்கு சாயத் தொழில்துறை தனது பங்களிப்பாக ரூ.370 கோடியை வழங்கியுள்ளது. அதேநேரம், பூஜ்ய கழிவு மறுசுழற்சி தொழில்நுட்பம் நாட்டின் இதர பகுதிகளில் கட்டாயமாக பின்பற்றப்படுவதில்லை. சுத்திகரிப்புச் செலவுகள் திருப்பூருடன் ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் குறைவாக இருக்கும். பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசுபாட்டைக் குறைத்த நிலையில் திருப்பூரின் சாயப்பட்டறைத் தொழில்துறை தண்டிக்கப்பட்டு உள்ளது.

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாத்து, மாசுபடுவதை குறைப்பதில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சாயப்பட்டறைத் தொழில் துறையினர் பூஜ்ய கழிவு மறுசுழற்சித் தொழில்நுட்பத்தைக் கட்டாயம் கடைபிடிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: