திருப்பூர், மார்ச் 21 –
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் நடத்த உரிய முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அரசு நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் புதனன்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடல் ஜனநாயகபூர்வமாக அனைத்து அமைப்புகளுக்கும் கிடைக்கும் வகையிலும், அனைத்து கூட்டுறவு உறுப்பினர்கள், விவசாயிகள், நுகர்வோர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாள் குறித்த விபரங்கள் தெரியும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக கூட்டுறவு சங்க இயக்குநர்கள், நிர்வாகிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுப்பது, வேட்பு மனுக்களை நிராகரித்து தள்ளுபடி செய்வது, வேட்பு மனு படிவங்களே வழங்காமல் காலதாமதம் செய்வது போன்ற நடவடிக்கைகள் கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் ஏராளமாக நடந்துள்ளன. தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னணியில் ஒரளவு ஜனநாயகப்பூர்வமாக தேர்தல்கள் நடந்து முடிந்தன. கூட்டுறவு சொசைட்டிகளின் தனி அலுவலர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளாமல் நியாயமான முறையில் ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், கடந்த காலத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பலவற்றில் முறைகேடுகள் நடைபெற்றது குறித்து மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசப்பட்டும் உள்ளது. இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வங்கிகளில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நியாயமான முறையில் தேர்தல்நடத்தப்பட வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு கூட்டுறவுகளிலும் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த அமைப்பின்அச்சுறுத்தலுக்கோ, மிரட்டுதலுக்கோ ஆளாகாமல் ஜனநாயகப்பூர்வமாக கூட்டுறவு தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக்்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.