சென்னை:
நீரவ் மோடி பாணியில், சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நகை தயாரிப்பு நிறுவனம் ரூ. 824 கோடியே 15 லட்சம் அளவிற்கு கடன் மோசடி செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

நேரடியாகவும், உத்தரவாத அடிப்படையிலும் கனிஷ்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடனை அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை என்று சிபிஐ-யிடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கூட்டமைப்பு 16 பக்கங்களில் புகார் அளித்துள்ளது.சென்னை தியாகராயர் நகரில் கனிஷ் கோல்டு பிரைவேட் லிமிட்(கேஜிபிஎல்) என்ற தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கம்பெனிச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உரிமையாளர்களாக நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் வசிக்கும் பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிறுவனம் கிரிஸ் (முசுஐஷ்ஷ்) என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், சில்லரை விலையில் மக்களுக்கும், சில மிகப் பெரிய கடைகளுக்கும் நடை செய்து கொடுத்து வந்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்காக எஸ்பிஐ வங்கி அளித்த கடன் உத்தரவாதம் அடிப்படையில், ஐசிஐசிஐ வங்கி ரூ. 50 கோடி கடன் வழங்கியுள்ளது. இதேபோல 2011-ஆம் ஆண்டு பஞ்சாப் நேசனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும்- எஸ்பிஐ வங்கியின் கடன் உத்தரவாதம் அடிப்படையில் கடன் வழங்கியுள்ளன.இதன் மூலம் கனிஷ்க் நிறுவனம், சந்தைகளில் தங்கம் வாங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.எஸ்பிஐ வங்கியும், ஒவ்வொரு ஆண்டும் கனிஷ்க் நிறுவனத்தின் வரவு -செலவுக் கணக்குகள், வருவாய், செலவுகள், விற்றுமுதல், லாபம், இருப்பு நகைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வந்துள்ளது. இதற்காக முறைப்படியான ஆடிட்டர்களையும் நியமித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் லாபம், இருப்பு நகைகள், வருவாய், வரவு – செலவு, விற்றுமுதல் ஆகியவை படிப்படியாக அதிகரித்து வந்ததாகவே, கடந்த 2007-08ம் ஆண்டு முதல் முதல் 2015-16ம் ஆண்டு வரை கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.இதன் அடிப்படையிலேயே அடுத்தடுத்து புதிய கடன்களும் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி ரூ. 215 கோடி, பஞ்சாப் நேசனல் வங்கி ரூ. 115 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ. 45 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ. 20 கோடி, கார்ப்பரேசன் வங்கி ரூ. 20 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ. 30 கோடி, ஐடிபிஐ பேங்க் ரூ. 45 கோடி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 37 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ. 50 கோடி, எச்டிஎப்சி வங்கி ரூ. 25 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ. 25 கோடி, ஆந்திரா வங்கி ரூ. 30, யூசிஓ வங்கி ரூ. 40 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ. 50 கோடி என பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ் கோல்டு நிறுவனத்துக்கு மொத்தம் ரூ. 747 கோடியைக் கடனாக அளித்தன.

இந்தக் கடனுக்காக கனிஷ் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் இருந்து பல்வேறு சொத்துகளின் உறுதிப் பத்திரங்களை (கொலேட்ரல் செக்யூரிட்டி) மட்டும் எஸ்பிஐ வங்கி பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடன் கொடுத்த வங்கிகளில் 8 வங்கிகளுக்கு முறையாக கனிஷ் கோல்டு நிறுவனம் வட்டியையும், அசல் பணத்தையும் செலுத்தாமல் டிமிக்கி கொடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து எந்த வங்கிக்கும் வட்டியையும் செலுத்தவில்லை.இதுதொடர்பாக கனிஷ் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களை வங்கிகள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. மேலும் அந்த நிறுவனத்திடம் இருக்கும் இருப்பு நகைகள் குறித்த எந்த விவரத்தையும் ஆடிட் செய்யவும் அனுமதி கிடைக்கவில்லை.ஒருகட்டத்தில், வங்கிக் கூட்டமைப்பு அதிகாரிகள், கனிஷ் கோல்டு நிறுவனத்தின் அலுவலகம், நகைகள் தயாரிப்புக் கூடம், ஷோரூம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அவை செயல்படா நிலையில் இருந்ததும், கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் ஜெயின் நகை இருப்பு விவரம் குறித்து அளித்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரை போலியான ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள், வங்கிப் பணத்தை மாற்றியது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பது கண்ட அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நகைகள் தயாரிக்கப்பட்டு எங்கு செல்கின்றன, யாருக்கு விற்பனையாகின்றன என்பது குறித்த ஆவணங்கள் இல்லை, நகைகள் இருப்பு வைத்த விதத்திலும், விற்பனை செய்த விதத்திலும் போலியான பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிதி ஆண்டும் இருப்பு குறித்த ஆடிட்டிங் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்தே, கனிஷ் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிறுவனத்தின் லாபத்தை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர்; இது கடன் கொடுத்த வங்கிகளை மோசடி செய்ததாகும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டலப் பொதுமேலாளர் ஜி.டி. சந்திரசேகர், சிபிஐ இணை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் முதலாளிகள், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகளிடம் பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் ரூ. 824 கோடியே 15 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மொரீஷியஸ் ஓட்டம்
இதனிடையே, கனிஷ்க் நிறுவனத்தின் இயக்குநர்களான பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் ஆகியோர் மொரீஷியஸ் நாட்டிற்கு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் நீரவ் மோடியைப் போல, வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே பூபேஷ்குமார் தம்பதி இந்தியாவை விட்டு ஓடி விட்டதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.