திருப்பூர், மார்ச் 21-
கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வதில் ஆளும் கட்சியினரின் தலையீட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கூட்டுறவு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, நல்லுர் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆளும்கட்சியின் விருப்பத்திற்குகேற்ப கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். தனி அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து, ஆளும்கட்சியினர் கைகாட்டும் நபர்களுக்கு பதவிகளை வழங்க தயாராக உள்ளனர்.

ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் முறைகேடாக இயங்கியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, மீண்டும் முறைகேடுகளுக்கு வழிகொடுக்காமல், ஆட்சியரின் மேற்பார்வையில் தேர்தல் நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான முழு அதிகாரத்தையும், ஆட்சியரிடம் வழங்க தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.