நெல்லை,
சங்பரிவார் அமைப்புகள் ராமர் ரதயாத்திரை என்ற பெயரில் கலவர யாத்திரையை துவக்கியிருக்கின்றனர். இந்த கலவர யாத்திரை தமிழகத்திற்கு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடுபவர்களை தமிழக பாஜக பினாமி அரசு கைது செய்து வருகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை துவங்கியிருக்கிறது. முன்னதாக இந்த யாத்திரையை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார். இந்த யாத்திரை மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று  ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.
இந்த திட்டத்தின் கேரளா மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்ட எல்லையான புளியரை வழியாக கோட்டை வாசல் பகுதிக்கு வந்தது. இந்நிலையில் ரதயாத்திரைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடாத வகையில் நெல்லை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக நுழையும் இந்துத்துவ ரத யாத்திரையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற அரசியல் தலைவர்கள் பலர், நேற்று இரவே பெரியார் திராவிடர் கழக கு.ராமகிருட்டிணன், குளத்தூர் மணி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை, மதுரை- விருதுநகர் மாவட்ட எல்லையில் பாறைப்பட்டி என்னும் இடத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதே போல் வி.எச்.பி. ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டன மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதே போல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் ரதயாத்திரைமூலம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்திவருகின்றன. மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். அதற்கு அனுமதி மறுக்கவே பின்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அனைத்து எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

திமுக மறியல்
தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில்   கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க செயல் தலைவர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரதயாத்திரை ராமன் கோவில் கட்ட என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் ராமராஜ்ய ரதயாத்திரையை அனுமதித்தற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் பதில்
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் சாயம் பூச வேண்டாம் என முதலமைச்சர்  கூறினார். இந்நிலையில் முதல்வரின் பதில் ஏற்புடையதாக இல்லை எனக்கூற திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே சபாநாயகர் உத்தரவின் பேரில் திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது, ரத யாத்திரையை ரத்து செய்ய கோரி முழக்கம் மிட்டவாரே தி.மு.க உறுப்பினர்கள் வெளியேறினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தி.மு.க எம்.எல்.ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று, டி.டி.வி.தினகரன் ரத யாத்திரையை அனுமதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.