கோவை, மார்ச் 20-
பாரம்பரிய வாரச்சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சுயநல கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாரச்சந்தை வியாபாரிகள் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கோவை வாரச்சந்தை சிறு வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பேரூராட்சி, நகராட்சிகளால் ஏலம் விடப்பட்டு, பாரம்பரியமான வாரச்சந்தைகள் நடைபெற்று வருகின்றன. நூறு வருடங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த சந்தைகள் ஏராளமான சிறு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாக இருப்பதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாவட்டத்தின் சில இடங்களில் அரசின் எவ்வித அனுமதியின்றி தனியார் இடங்களில் வாரச்சந்தைகள் நடத்தி விவசாயிகள், வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வருகின்றனர். இந்நபர்கள் ஆளும் கட்சியினரின் ஆதரவை பெற்றுள்ளதால் அதிகாரிகளும் எங்களின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

குறிப்பாக, இதுபோன்ற சுயநலத்தோடு நடைபெறும் சந்தைகளை அமைச்சரேதிறந்து வைக்கும் நடவடிக்கைகள் எங்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இத்தகைய தனியார் வாரசந்தைகளால் அரசுக்கு வருவாய்இழப்பு ஏற்படுவதோடு, பாரம்பரிய வாரச்சந்தை வியாபாரிகளும்கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறோம். எனவே, அனுமதியின்றி வாரச்சந்தைகள் நடப்பதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.முன்னதாக, இம்மனுவினை அளிக்க 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.