கோவை, மார்ச் 20-
வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரின் பேரனை கத்தியால் குத்திக் கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைகாரன்புதூர், தலகண்ட அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவர் அப்பகுதியை சேர்ந்த பஞ்சலிங்க அம்மாள் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். செல்வகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வீட்டு வாடகை சரிவர கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் பஞ்சலிங்க அம்மாள் பலமுறை வீட்டு வாடகை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து வேட்டைக்காரன்புதூர், முத்து விநாயகர் கோவில் வீதியில் வசிக்கும் தன்னுடைய பேரன் சபரிநாதனிடம் (27) பஞ்சலிங்க அம்மாள் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 2015 ஜனவரி மாதம் 28 ஆம்தேதி அன்று செல்வகுமாரின் வீட்டுக்கு சென்ற சபரிநாதன், வீட்டின் வாடகை உடனடியாக வழங்குமாறும், இல்லையெனில் வீட்டை காலி செய்யும்படியும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சபரிநாதனை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சபரிநாதன் உயிரிழந்தார்.

இதுகுறித்து வேட்டைக்காரன்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கின் விசாரணை, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் இந்த கொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை செவ்வாயன்று நடந்தது. இறுதியில் செல்வகுமார் மீதான கொலைக் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து செல்வகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: