திருப்பூர், மார்ச் 20-
விஎச்பி-யின் ரதயாத்திரையை தமிழகத்தில் தடை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்கிற கோரிக்கையை முன்வைத்து விஎச்பி அமைப்பினர் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் செவ்வாயன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் வந்தது. இந்த யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்ஒருபகுதியாக திருப்பூர் புஷ்பா ரவுண்டான பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், பல்லடம் பிரதான சாலை, நொய்யல் ஆற்று பாலம் அருகில் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர் அஸ்லாம் மற்றும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:
இதேபோல், மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு விஎச்பி அமைப்பு நடத்தும் ரதயாத்திரையை தடை செய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும் சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், ஜவுளி கடை, சீலநாயக்கன் பட்டி புறவழிச்சாலை உள்ளிட்ட 5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

கோவை
கோவை காந்திபுரம் பெரியார் சிலை, உக்கடம், ஆத்துப்பாலம், காந்திபுரம் 100 அடி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.