புதுக்கோட்டை:
தமிழகத்தின் நெல்லைக்குள் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை நுழையும் நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தந்தை பெரியார் சிலையை உடைத்து மதவெறிச் சக்திகள் தங்களின் கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது புதுக்கோட்டைவிடுதி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் இராவணன். திராவிடர் கழகத்தின் மண்டலச் செயலாளர். சிறு வயது முதல் தந்தை பெரியாரின் காலத்தில் இருந்தே தீவிரமாக இயங்கி வருபவர். அந்த இயக்கத்தில் மாவட்டத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களில் செயல்பட்டவர். இவரின் முயற்சியால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டைவிடுதியில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த படிப்பகத்திற்கு அருகில் ஏழரை அடிகொண்ட பெரியார் சிலையை கடந்த 25.04.2013  அன்று திக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். பெரியாரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களில் இந்தச் சிலைக்கு அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமையன்று நள்ளிரவு சில மர்ம நபர்களால் பெரியாரின் சிலையில் உள்ள தலை தனியாக துண்டிக்கப்பட்டு கீழே வீசப்பட்டுள்ளது. காலையில் இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரும் கொந்தளிப்புடன் குவியத்தொடங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததோடு துண்டிக்கப்பட்ட சிலையின் தலையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தியுள்ளனர்.

தந்தை பெரியார் சிலை உடைப்புச் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டைவிடுதி, ஆலங்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. புதுக்கோட்டைவிடுதி தந்தை பெரியார் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மதிமுக மாவட்டச் செயலாளர் டாக்டர் க.சந்திரசேகரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், தி.க. மண்டலச் செயலாளர் இராவணன், மாவட்டத் தலைவர் அறிவொளி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், சமூக ஆர்வலர்கள் சதாசிவம், தரணி ரமேஷ், பாபுஜனான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆலங்குடி சந்தைப்பேட்டையில் இருந்து திமுக இலக்கிய அணிச் செயலாளர் கவிதைப்பித்தன் தலைமையில் பேரணியாகச் சென்று வடகாடு முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மாலையில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் இந்துத்துவ மதவெறியைக் கண்டித்தும், எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை கூறுகையில், “திரிபுராவில் மாமேதை லெனின் சிலை தகர்ப்பைத் தொடர்ந்து அடுத்த இலக்கு தமிழகத்தில் பெரியார் சிலை என பாஜக பிரமுகர் எச்.ராஜா கக்கிய விஷமப் பேச்சுதான் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்குக் காரணம். தமிழக அரசு பாஜகவின் பினாமியாகச் செயல்படும் காரணத்தினாலேயே எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் விளைவை தமிழகம் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் பேசும்போது: “தமிழக எல்லைக்குள் மதவெறிச்சக்திகள் நுழையும் நேரத்தில் இங்கே தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்டுள்ளது. இது மதவெறிச் சக்திகளின் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது. மதவெறிச் செயல்களுக்கு தமிழகத்தின் எடப்பாடி பழனிசாமி அரசும் அதன் காவல்துறையும் கொடுக்கும் ஊக்கம்தான் இதற்குக் காரணம். இது தொடர ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
சிலையை நிறுவிய திக மண்டலச் செயலாளர் இராவணன் கூறும்போது, 2013 ஆம் ஆண்டு ரூ.35 ஆயிரம் செலவில் மன்னார்குடியிலிருந்து இந்த சிலையை செய்து கொண்டுவந்தோம். சிலை திறப்பு அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று இந்த நிலையைப் பார்க்கும் போது என்னால் தாங்க முடியவில்லை என்றார்.

சிலை தகர்ப்பு சம்பவம் மாவட்டம் முழுவதும் கடும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியுள்ளது. சிலை தகர்ப்பில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.