நீதிமன்ற உத்தரவையும் மீறி டாங்சன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஆட்குறைப்பு செய்ததை தடுத்து மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்பதூர் தாலுகா இருங்கட்டுகோட்டை சிப்காட்டில் செயல்பட்டுவரும் டாங்கசன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கொரிய நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 160 தொழிலாளர்கள் வரை பணியாற்றினர். கடந்த ஓராண்டில் படிப்படியாக குறைத்து தற்போது 113 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.நிர்வாகம் தொழிலாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 2017 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை இதுவரை வழங்கவில்லை.

போனஸ் மற்றும் ஆயுதபூஜை அன்பளிப்பு ஆகியவையும் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து சிஐடியு சார்பில் இருங்காட்டுகோட்டையில் செயல்படும் தொழிலாளர்நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் இந்திய தொழிற்சங்க சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நிறுவனம் கைமாறுவதாகவும் இயந்திரங்களை அப்புறப்படுத்தப்படுவதாகவும், தெரியவந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் எதிர் மனுதாரரின் வழக்கறிஞர் தற்போது நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகாது என்று அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தையும், தொழிலாளர் நலத்துறையையும் ஏமாற்றுகிற விதமாக கடந்த 12 ஆம் தேதி முதல் அட்குறைப்பு போன்ற நிரந்த பணி நீக்கம் செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு வழங்கியுள்ளது. இது அப்பட்டமான சட்ட விரோத செயல் என்று சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் சிஐடியுவின் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் சார்பில் திங்களன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மற்றும் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டவிரோதமாக செயல்படும் டாங்கசன் நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்.

அந்த மனுவில் டாங்சன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மீது இந்திய தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் தொழிலாளர்துறை உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு முதல் கட்ட விசாரணை நடந்துள்ளது. அதேபோல் நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்கள் மீதும் தொழிலாளர்களையும், அரசையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றிய காரணத்திற்காக நிர்வாக இயக்குநராக செயல்படும் கிம்மின்சியோக் மற்றும் துணைப்பொது மேலாளர் டி.செந்தில்குமார், மேலாளர் பிச்சாண்டி, மனிதவள மேலாளர் சுரேஷ் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பெரும்பதூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: