திருப்பூர், மார்ச் 20 –
டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டும் பார் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) மாநாடு காங்கயத்தில் மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் எம்.பீர்முகைதீன் வரவேற்றார். சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டப் பொதுச் செயலாளர் ஒய்.அன்பு, பொருளாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினர். சம்மேளனத் துணைத் தலைவர்கள் ஜெ.ஆல்தொரை, பொன்.பாரதி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

தீர்மானங்கள்:
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்து ஊழியர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தை அமலாக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு சாதகமான நீதிமன்றத் தீர்ப்புகளில் மேல்முறையீடு செய்யாமல் அமலாக்க வேண்டும். வார விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்க வேண்டும், மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலப்பிரிவு உருவாக்கி இபிஎப், மருத்துவ நிவாரண நிதி பெறுதல் உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக எம்.ஆறுமுகம், பொதுச் செயலாளராக ஒய்.அன்பு, பொருளாளராக ஏ.கௌஷ்பாஷா மற்றும் துணைத் தலைவர்கள் எம்.சந்திரன், எம்.பீர்முகைதீன், முருகேசன், துணைச் செயலாளர்கள் பி.பிரகாஷ், என்.கனகராஜ், பி.திருமூர்த்தி ஆகியோரும், 11 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முடிவில் சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.திருச்செல்வன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.