===தெ.சுந்தர மகாலிங்கம்===
தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் ஓரளவு விவரம் தெரிந்தவர் என்று நம்பி வந்தவர்களுக்கு, “பாமர மக்களை ஏமாற்றுவதற்காக ‘காந்தி’ என்ற பெயரை இணைத்துக் கொண்டவர் சோனியா” எனப் பேசியதைக் கேட்டதும் அதிர்ச்சி ஏற்பட்டது.

நேர்மையை ஓரங்கட்டி விட்டு மனச்சாட்சியை ஒதுக்கிவிட்டுத்தான் தமிழிசையால் இவ்வாறு ஓர் அபாண்டமான குற்றச்சாட்டை சோனியாவின் மீது சுமத்த முடியும்.மோதிலால் நேருவின் மகன் ஜவஹர்லால் நேரு. ஜவஹர்லாலின் மனைவி கமலா நேரு. கமலம் திருமணத்துக்கு முன் தம் பெயருக்குப்பின் தந்தையின் குடும்பப் பெயரை ஏற்றிருப்பார். திருமணத்துக்குப் பின் ‘நேரு’ பெயருடன் ஒட்டிக் கொண்டது.ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா தம் திருமணத்துக்கு முன் ‘இந்திரா நேரு’ என்றே குறிப்பிடப்பட்டிருப்பார். பெரோஸ் காந்தி என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்ட பின் ‘இந்திரா நேரு’ என்பது ‘இந்திரா காந்தி’ யாக மாறிவிட்டது.இந்திராகாந்தியின் மக்கள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோர் பெரோஸ் காந்தியின் வழி வந்தவர்களே. எனவே அவர்களின் பெயர்கள் ‘காந்தி’ என்னும் பின்னொட்டை ஏற்றுள்ளன.

ராஜீவ் காந்தியின் மனைவி என்ற முறையில் சோனியாவின் பெயருடன் ‘காந்தி’ இணைந்துள்ளது.சஞ்சய் காந்தியின் மனைவி யார் என்பதும் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்ற தகவலும் தமிழிசை சவுந்தரராஜனுக்குத் தெரியாதா? மேனகா காந்தியிடம் “ஏன் காந்தி பெயரைப் பயன்படுத்திப் பாமரர்களை ஏமாற்றி வருகிறீர்கள்?’’ என்று நேரடியாகக் கேட்கலாமே!
“படித்தவர்கள் சூதும் வாதும் பண்ணினால்…” என்று பாரதி சொன்னது தமிழிசையின் நினைவில் இல்லையா?

பெரோஸ் காந்தி பெயர் விஷயம் பலர் அறியாதிருக்கக்கூடும். தவறாக மகாத்மா காந்தி பெயரோடு அவர்கள் சம்பந்தப்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு சோனியா காந்தி எந்த வகையில் பொறுப்பாக முடியும்? எங்காவது தம் பெயருக்கும் மகாத்மா காந்தி பெயருக்கும் வம்சாவளித் தொடர்பு இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளதாகத் தமிழிசை நிரூபிக்க முடியுமா? அற்பம் என்று பிறர் நினைப்பார்களே என்ற எண்ணம் ஏன் உருவாகவில்லை தமிழிசைக்கு?“இலங்கைத் தமிழர்களின் வீட்டில் பால் காய்ச்சினார் மோடி” என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார் தமிழிசை.போருக்குப் பிந்திய ஈழம் தொடர்பாகக் காங்கிரசுக்கு மாற்றாக வந்த மோடி அரசு சற்றும் கவலையோ, அச்சமோ கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதவாறு ராஜபக்சே சர்வதேச அரங்கில் சுதந்திரமாக உலவ உதவியதை மறக்க முடியுமா?
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிக அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டி அரசு இலங்கையில் ஏற்பட மோடி என்ன செய்தார்?

போருக்குப்பின் தமிழர் பகுதியில் இன்னும் நிலை கொண்டுள்ள சிங்கள ராணுவத்தை அகற்ற இலங்கை அரசிடம் மோடி ஏதும் பேசினாரா?
தமிழர் பகுதிகளில் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த மோடி என்ன செய்தார்?

போரின் போது காணாமற் போனவர்களைப் பற்றிய நியாயமான விசாரணையை முடுக்கி விடுமாறு இலங்கை அரசை மோடி தூண்டினாரா?பால் காய்ச்சினாராம் மோடி? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

தமிழ், தமிழர் தொடர்பான விவகாரங்களில் ‘நீட்’ நிர்மலா, வானதி சீனிவாசன், எச்.ராஜா போன்றோருடைய செயல்பாடுகள் எப்படி இருக்குமென்பது நாம் நன்கு அறிந்ததே.
“அழகுத் தமிழ் என்று சிதம்பரம் எழுதிக் கொடுத்ததை ராகுல் பேசுகிறாரா?” என்று மிகக் கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. சிதம்பரம் எழுதிக் கொடுத்திருந்தால் என்ன? தமிழின் சிறப்பைத் தானே கூறியுள்ளார்.

மோடி “வணக்கம்” என்று மேடையில் கூறினால் நாம் மகிழ்கிறோமே. வேற்று மொழி பேசும் ஒருவர் நம் மொழியில் ஒரு சொல்லைக் கூறினாலும் பெருமை அடைகிறோம்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்ததையும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததையும் சுட்டிக்காட்டும் தமிழிசை ராகுலுக்குத் தமிழுக்கு ஆதரவாகப் பேசத் தகுதியில்லை என்கிறார்.1967 இல் இழந்த தமிழக ஆட்சியை மீண்டும் பெற முடியாமல் காங்கிரஸ் தவிப்பதே அதற்குரிய தண்டனை.இன்று பாஜக என்ன செய்கிறது? இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்தது தமிழிசைக்கு அவமதிப்பில்லையா? பெரியார் குறித்து எச்.ராஜா பேசியது தமிழிசையின் சுயமரியாதைக்கு நேர்ந்த இழுக்கில்லையா? ஒரு நிமிடம் தம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் தாம் பெற்ற கல்வியும் மதிப்பும் எவரால் என்பது புரியும்.”தமிழகம் புறக்கணிக்கப்படுவதுபோல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது” என்பது தமிழிசையின் மற்றொரு கூற்றாகும்.

உண்மைக்கும் மாயைக்கும் வேறுபாடு தெரியாதவரா தமிழிசை? சில நாட்களுக்கு முன் தமிழக சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு குறையென்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது மாயையா?

‘நீட்’ தேர்வு தமிழக கிராமப்புற, ஏழை, மாணவ, மாணவியரின் உயர்கல்வியை மறுப்பதற்கான திட்டம் என்பது தெரிந்தும் அதைத்திணிப்பது ஏன்? தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் நம் மாணவர் எண்ணிக்கை குறைவது உண்மையல்லவா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குள் எத்தனை தகிடுதத்தங்கள்! சில மாதங்களுக்கு முன் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து எப்படிப்பட்ட பித்தலாட்டம் செய்தது!

தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமான முன்னாள் தஞ்சை மாவட்டப் படுகை நெடுகிலும் எரிவாயு, எண்ணெய் என்று மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் மத்திய அரசு மாநில நலன்களைப் புறக்கணிக்கவில்லையா?கொங்கு மண்டலத்தின் சிறு, குறு தொழில்கள் நசித்துப் போகுமளவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தமிழக நலன்களை மேம்படுத்துவதற்காகவா?
ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுவதைத் தமிழகம் வழிமொழியும் நிலையுள்ளதே யதார்த்தம்.வர்ணாசிரம தருமத்தின் கோரப்பற்கள் தமிழர் பண்பாட்டைக் குதறிச் சீரழித்துத் தீண்டாமைக் கொடுமையின் மீள் அரங்கேற்றம் காணத் துடிப்பது தமிழிசைக்குப் புலப்படவில்லையா?

பாஜக சார்பில் ஊடகங்களில் காட்சி தருவோரும் விதண்டாவாதம் செய்வோரும் யாரெனத் தமிழிசை கவனிப்பது நல்லது. பார்ப்பனீயம் தன் நச்சுக் கொடுக்குகளை உயர்த்திக் கொள்ள பாஜக இடம் கொடுக்கிறது.

‘காவியற்ற தமிழகம்’ என்னும் முழக்கம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள இவ்வேளையில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய பாதைக்குக் கொண்டு செல்ல நிலைக்கும் மோசடிக்காரர்களிடமிருந்து விலகி நிற்பதுதான் தமிழிசை தமிழகத்துக்குச் செய்யும் தொண்டாகும்.

தமுஎகச, விருதுநகர் மாவட்டக்குழு.

Leave A Reply

%d bloggers like this: