====பேரா.கே.ராஜூ===
பெண்கள் உலக மக்கள் தொகையில் ஒருபாதியினர், அவ்வளவு தான் அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது என்று மட்டுமே புரிந்து கொள்பவர்கள் பலர். உண்மையில் உலக முன்னேற்றத்தில் ஆண்களுக்குச் சமமான பங்கு அவர்களுக்கும் உண்டு. உழைப்பாளி மக்களில் அவர்கள் மிக முக்கியமான பங்கினை வகிப்பவர்கள் என்ற உண்மையை இன்று பலராலும் மறுக்க முடியவில்லை. குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்துறையில் அதுஇன்னமும் அதிகமாக உணரப்பட்டிருக்கிறது. ஆனாலும், படித்துப் பட்டம்பெற்ற பெண்களில் மிக அதிக அளவிலானவர்கள் அறிவியல் தொழில்நுட்ப செயல்பாடுகளிலிருந்து விடுபட்டுப் போய்விடுகின்றனர்.இது பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக இருந்தாலும் அவற்றில் முக்கியமானது அவர்கள் பெண்களாக இருப்பதன் காரணத்தினால்தான். பல நேரங்களில் அவர்கள் ஓட்டுநர் இடத்தில் இருக்கத் தகுதியானவர்கள் என்ற போதிலும் பின் இருக்கையில் அமரவைக்கப்படுவதற்கு குடும்பப் பொறுப்புகளே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. பெண்கள் சந்திக்கும் சவால்கள் அடிக்கடி சுட்டிக் காட்டப்பட்டாலும், அவற்றைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகள் பல நேரங்களில் எடுக்கப்படுவதே இல்லை. அனைவருக்கும் கல்வி என்றும் பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி என்றும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அரசு சில முயற்சிகளை எடுத்து வந்தாலும் களநிலைமை உற்சாகமூட்டுவதாக இல்லை. பெரும்பாலான பெண் குழந்தைகளின் கல்வி இடையிலேயே நிறுத்தப்படுகிறது. மேல்நிலைப் பள்ளி, கல்லூரி அளவில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் நன்கு பிரகாசித்த பெண்கள் கூட திருமணம், தாய்மை, குழந்தைகள்-முதியோர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு போன்ற காரணங்களினால் அதற்கு மேல் போக முடியாமல் நின்றுவிட நேர்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST- Department of Scidnce and Technology )-யில் உள்ள நாங்கள் இந்தக் குறைபாட்டினை உணர்ந்து அதைச் சரிசெய்ய பல திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம். 2002-03 ஆம் ஆண்டில்(WOS- Women Scidntists Scheme) என்ற பெண் விஞ்ஞானிகள் திட்டத்தை டிஎஸ்டி தொடங்கியது.தங்கள் ஆராய்ச்சிப் பணி இடையில் தடைபட்டுப் போன பெண்கள் பின்னர் அதைத் தொடர விரும்பலாம். அம்மாதிரி நிலையில் உள்ளவர்களில் 27-லிருந்து 57 வயது வரை உள்ள பெண் விஞ்ஞானிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் ஆராய்ச்சிக்கான சிறப்புத் தொகையைக் கொடுத்து அவர்களை மீட்டுக் கொணரும் இலக்குடன் இத்திட்டம் செயல்பட்டது. 2014-15 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்க விரும்பும் பெண்களை KIRAN (Knowledge Involvement Research Advancement through Nurturing) என்ற ஒரே குடையின் கீழ் கொணர்ந்துஅவர்கள் ஆராய்ச்சியைத் தொடர்வதற்குபுதிய வாய்ப்புகள் தரப்பட்டன.

ஆராய்ச்சிமற்றும் வளர்ச்சித் துறையில் பெண்களதுதிறமையை பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாலின சமத்துவத்தைக் கொணர்வதே டிஎஸ்டியின் நோக்கம். அறிவியல் தொழில்நுட்பத்துறையின் பல்வேறு பிரிவுகளில் அடிப்படை ஆராய்ச்சிப் பணிக்கு திட்டம்-ஏ, சில சமூக சவால்களைச் சந்திக்க நேரும் துறைகளில் ஆராய்ச்சிப் பணிக்கு திட்டம்-பி, அறிவுச் சொத்துரிமைத் துறையில்ஆராய்ச்சிப் பணிக்கு திட்டம்-சி .. என பெண்களுக்கென பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. “கனவு காணும் தைரியம்” உள்ள 4000-த்திற்கும் மேலான பெண்களை இத்திட்டங்கள் உருவாக்கியுள்ளன.

பெண்கள் மட்டுமே பணிபுரியும் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது, அடிமட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தருவது ஆகியவை கிரன் திட்டத்தின் ஆணிவேராக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பெண் விஞ்ஞானிகளுக்கு ஆய்வுத் துறையில் சர்வதேச அளவில்தொடர்புகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஆடுகளத்தை உருவாக்குவது, ஆய்வுத் துறையில் வலிமையான தளத்தை ஏற்படுத்தித் தருவது ஆகிய பணிகளில் டிஎஸ்டி கூர்மையான முயற்சிகளைச் செய்து வருகிறது.மார்ச் 8 அன்று கொண்டாடப்படும் பெண்கள் தினம் சம்பிரதாயமான நாளாகக் கடந்து சென்றுவிடாமல் உண்மையிலேயே பெண்கள் பல்வேறு துறைகளில் அடைந்துவரும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் தினமாக மாற வேண்டும் என்பதே டிஎஸ்டியின் லட்சியம். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் முன்னேறுவோம்! (நன்றி : 2018 மார்ச் மாத ட்ரீம் 2047 இதழில் சந்தர் மோகன் எழுதியுள்ள தலையங்கம்)

Leave a Reply

You must be logged in to post a comment.