புதுதில்லி:
தெலுங்குதேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மக்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக, அவை 11-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.
திங்களன்று மக்களவை காலை தொடங்கியவுடன் அதிகமுக எம்.பி.க்களும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தக்கோரி டிஆர்எஸ் எம்பிக்களும் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம்நீடித்தது.
அப்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிமுக, டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்களை அவர்களின் இருக்கையில் அமரும் படி கேட்டுக்கொண்டார். ஆனால், எம்.பி.க்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால், தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால்,நண்பகல் 12 மணிவரை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

அதன்பின் 12 மணிக்கு மேல் மக்களவை மீண்டும் கூடியது. அப்போது, அவைத்தலை வர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், “தெலுங்குதேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சி உறுப்பினர்கள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதை எடுக்க வேண்டும் என்பதால், எத்தனை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வு
செய்ய வேண்டும். ஆதலால், தீர்மா னத்துக்கு ஆதரவாக இருக்கும் உறுப்பி னர்கள் எழுந்து நிற்கலாம். அப்போதுதான் எண்ணிக்கையில் கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.
ஆனால், டிஆர்எஸ், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு, அவையின்
மையப்பகுதியை விட்டு நகராமல் இருந்தனர்.

அதேசமயம், இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஏஐஎம்ஐஎம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி.க்களும் எழுந்து நின்றனர். இதனால், எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று எண்ணுவதில் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுக, டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்களை அவர்களது இருப்பி டத்துக்கு செல்லும்படி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார். அப்போது தான் தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கும் எம்பிக்களை எண்ண முடியும்” என்றார். ஆனால், சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் எம்.பி.க்கள் தொடர்ந்து முழுக்கமிட்டனர்.

அப்போதுபேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘மத்திய அரசு எந்தவிதமான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. விவாதத்துக்கும் தயாராக இருக்கிறது” என்றார்.எனினும் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நில வியதால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுக்க முடியாது என்று கூறி சுமித்ரா மகாஜன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.மாநிலங்களவையிலும் இதேநிலை ஏற்பட்டது. அவை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: