கோவை, மார்ச் 19-
ஆழியார் புளியங்கண்டி பகுதியில் திறக்கப்பட்ட ரேசன் கடையை முறையாக திறக்கக்கோரி மலைவாழ் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க ஆனைமலை வட்டார செயலாளர் கே.ஏ.பட்டிஸ்வரன், ஜி.சுரேஸ்குமார், ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் நகர் புளியங்கண்டியில் சுமார் 250 ரேசன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்
பாலானோர் மலைவாழ் பழங்குடி இனத்தவர். இவர்கள் ரேசன் பொருள்களை வாங்க புளியங்கண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழியார் நகர் ஆரம்ப சுகதார நிலையம் அருகிலுள்ள ரேசன் கடைக்கு செல்லவேண்டி உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புளியங்கண்டியில் ஒரு ரேசன் கடை கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.

ஆனால், திறப்பு விழா அன்று மட்டுமே ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆகவே, புளியங்கண்டியில் திறந்த ரேசன் கடையிலேயே இப்பகுதி மக்களுக்கு பொருள்கள் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

உழவர் சந்தை முறைகேடு: கோவையிலுள்ள உழவர் சந்தையில் பெரும் முறைகேடுகள் நடைபெறுகிறது. குறிப்பாக, சிங்காநல்லூர் உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கை தனியாருக்கு ஒப்படைத்ததால், அதனை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குறைபாடுகளை களைந்து விவசாயிகள் பயன்பெரும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் காய்கனிகளுடன் மனு அளித்தனர்.

ராஜஸ்தானிகள் மனு: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நாங்கள், கோவை போத்தனூர் தயாளம்மாள் வீதியில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். மண்சிலை, நாற்காலி உள்ளிட்ட சிறு சிறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகள் இல்லை. ஆகவே, எங்களுக்கு இலவச மனைப்பட்டா, ரேசன் கார்டு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆலை கழிவால் பாதிப்பு: செங்காளிபாளையம், அசோகபுரம், இடிகரை பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, செங்காளிபாளையத்தில் உள்ள தனியார் பாலிமர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு ஆலை தொடர்ந்து இயங்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.