நாமக்கல், மார்ச் 19-
மூன்றாண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மானத்தி கிராமம் பழைய காலனியை சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:  மானத்தி ஆதிதிராவிடர் பழைய காலனியில் 35 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். இங்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பழைய காலனிக்கு தண்ணீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அருகில் உள்ள புதுகாலனிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். இந்த தண்ணீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை.

அதேநேரம், அனுமதி இல்லாமல் பலர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் போட்டுள்ளனர். மேலும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை திருடி வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பழைய காலனிக்கு தனியாக பகிர்மான குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.