சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(குறள்: 1031)
முன்னொரு பருவம் குழந்தையாய் இருந்த பொழுது வானொலியில் தினம் கேட்டது – ‘உழவர் உலகம்’. ஆம் இந்த உலகு உழவர்களுக்கானது. அதனை ஆக்கிரமித்து வீடுகளும் மாட மாளிகைகளும் கட்டி, ஏவல் ஆள் இருத்தி, பஞ்சனையில் அமர்ந்து,தொலைக்காட்சியில் பூந்தோட்டங்களையும் மலர் கண்காட்சியும் காண்கிறோம். எங்கள் வீட்டில் இன்று இரண்டு புத்தம் புதிய ரோஜாக்கள் பூத்த உடன் வந்த மகிழ்ச்சியில் ஒரு பகுதி போலும் நான் கண்ட மலர் காட்சிகளில் வந்துவிடவில்லை.

தன் பசிக்கு மேல் நீர் ஒரு கவனம் உணவை அதிகம் புசித்தாலோ அல்லது குப்பையில் சேர்த்தாலோ நீங்கள் அடுத்தவர் உணவை வீணாக்கியவராகின்றீர். எந்த ஒரு பொருள் உற்பத்தியாகின்றதோ அது மீண்டும் மறுசுழற்சிக்கு வரவில்லையெனில் மாசாகின்றது. அப்படியென்றால் காற்றும், நீரும், நிலமும் இன்று மாசுபட்டு கிடப்பதற்கு நாம் மறுசுழற்சி செய்யாது விட்டுவிட்ட பொருட்களே காரணம்.

சென்ற முறை கூறினேன்!  தன்னிறைவு என்பது ஒவ்வொரு கிராமங்களும், நகரங்களும் தனக்கு தானே ஏற்படுத்தி நிறைவை நோக்கி செல்ல வேண்டியது என்று. அப்படியானால் அதன் உட்கூறுகளான ஒவ்வொரு வீடுகளும் தன்னிறைவை நோக்கி நகர வேண்டியது அவசியமாகின்றது.சென்ற முறை ஒரு கல்லூரியில் உரையாற்ற சென்றபோது மதுரையின் சில பல தெருக்களில் நடந்து சென்றேன். என்ன ஒரு முன்னேற்றம். அழகிய தெருக்கள். எங்கும் தார் போட்டு பூசி பொழுகிய தெருச்சாலைகள். ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் அதனுள் எல்லாக் குப்பைகளும் கொட்டப்பட்டு நிறைவாக காட்சி அழித்தது. வஞ்சப்புகழ்ச்சி என்று ஒன்று உங்களுக்கு புரிந்திருக்கும் எனில் நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

தெருக்கள் முழுதும் தார் சாலை அமைத்து மூடிவிட்டால் மழைநீர் water table recharge ஆங்காங்கே மழைநீர் சேகரிக்கும் அமை—- தேவை. கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க வேண்டுமானால் நிலத்தடி நீர் போதிய அளவில் மறு சுழற்சி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மழைநீர் மண்ணை வந்தடையும் போது அதில் உள்ள ஆக்டினோமைசீடல் என்ற பாக்டீரியா இனம் சார்ந்த உயிரினம் வேதி வினை புரிந்து மழைநீர் வாசனை தருகிறது. அதைக்கூட நம்மபவர்கள் புகழை மழைக்குத் தராமல் மண் வாசனை என்று கூறிவிட்டோம்.
வீட்டில் உபயோகிக்கும் அத்தனை நீரும் முறையாக செவ்வனே கால்வாயில் கலக்கிறது. வீட்டில் தோட்டம் இருந்தால் அதற்கு மீண்டும் நிலத்தடி நீரை பயன்படுத்தி வீணாக்குகின்றோம். ஒரு துளி நீரையாவது நம்மால் உண்டாக்க இயலுமா? ஆனால் சேமிக்க இயலும்.வீட்டில் கிணறு, ஆள்துணை கிணறு போன்றவற்றை சுற்றிலும் சிமெண்ட் போடப்பட்டிருந்தால் இரண்டடி தூரமாவது மண்பரப்பு வருமாறு வைக்கவும். உங்கள் சமையலறையில் இருந்து வெளிவரும் நீரானது உங்கள் வீட்டின் கழிவுநீரில் பாதியாகும். இதனை நேரடியாக கால்வாயில் சேர்க்காமல் உங்கள் தோட்டத்தில் பாய்ச்சுவீர்களா எனில் உங்கள் நகரின் பாதி கழிவுநீர் மேம்பாட்டு வேலைகுறையும். செய்வீர்கள் என நம்புவோம். இதன் மூலம் கழிவுநீரின் அளவு குறைவதுடன், 50சதவீதம் நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மண்ணின் நீர் மண்ணைச் சேர்வதே முறை.

தற்போது உள்ள கட்டிட அமைப்புகளில் பெரும்பாலும் சிறிதளவு காலி இடத்துடன் கட்டப்படுகிறது. அதில் நான்கைந்து தொட்டிகளில் செடி வளர்த்தாலே போதுமானது. இன்னமும் வீட்டுத்தோட்டம் அமைப்பீர்களேயானால் சாலச்சிறந்தது. 10 x 10 அடி தூரம் போதும். வாரத்தில் இரண்டு நாள் சமைப்பதற்கான காய்கறிகள் கிடைத்துவிடும். அதிலும் ஒரு அடிக்கு ஒரு பள்ளம் வைத்து வீட்டின் காய்கறி கழிவுகளை அதில் சேர்த்து வருவீர்களேயானால் தோட்டத்திற்கு எரு கிடைப்பதுடன் வீட்டிலிருந்து வெளியேறும் குப்பையில் நான்கில் மூன்று பகுதி குறைந்து விடும். சிந்தித்துப் பாருங்கள்.நான்கில் மூன்று பகுதியை அதாவது 75 சதவீதம் குப்பை சேருவதை வீடுகளிலேயே தடுப்பீர்களேயானால் நாடும் வீடும் சேர்ந்தே சுத்தமாகிவிடும்.ஒரு கட்டு காகிதம் செய்வதற்கு சில மரங்கள் வெட்டப்படுகின்றன. காகிதத்தின் உபயோகத்தினை குறைக்கலாம். உபயோகிக்கப்பட்ட காகிதங்களை தேவையற்றவற்றை மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். வீடு என்றில்லாமல் வயல் வெளிகளிலும் கரும்புத் தோகை, சோளத் தட்டை போன்றவற்றை எரித்து வயல் வெளிகளை தூய்மைப்படுத்துவதை காணலாம். இதனால் சுற்றுச்சுழல் மாசாவதோடு அதில் உள்ள தாதுக்களும் மூலக்கூறுகளும் மீண்டும் மண்ணில் சரியான முறையில் சேருவது தவிர்க்கப்படுகிறது. வயல்வெளிகளில் உண்டாகும் வேளாண் கழிவுகளை சேர்த்து மட்காக்கி வயல் வெளிகளில் உரமாக பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உரத்தின் தேவையை குறைப்பதுடன், நுண்ஊட்டம் குறைபாடு பயிர்களில் ஏற்படாமல் தடுக்க இயலும்.

இத்தோடு பயிர் செய்யாத காலங்களில் வயல்வெளிகளை தரிசாக விடுவதை தவிர்த்து கொழிஞ்சி, தக்கை பூண்டு, சணப்பை, அகத்தி முதலியவற்றை வளர்த்து பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம். இதனால் பயிர்வகைகளுக்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து போதிய அளவில் கிடைக்க ஏதுவாகிறது. இத்துடன் உயிர் உரங்களை அசோலா, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தி இராசயன உரங்களுக்கான தேவையை குறைப்பதன் மூலம் இலாபத்தை பெருக்க இயலும்.

மூன்று போகமும் பயிர் செய்வது, பயிர் சுழற்சி கையாள்வது, கலப்பு பயிர்களை (mixed crop, relay crop) பயிர் செய்வது போன்றவற்றின் மூலம் வருமானத்தை பெருக்க இயலும். இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி வயலின் ஒரு குண்டு நிலத்தில் காய்கனிகள் பயிரிடுவதன் மூலம் தன் வீட்டின் தேவைகளை நிறைவு செய்ய இயலும். உபரியை உள்ளூரிலேயே விற்பனை செய்து லாபம் சேர்க்கவும் இயலும். பயிரிடும் அடர்த்தியை (cropping intensity)யை கூட்டுவது ஒன்றே அதிக லாபம் மற்றும் வருமானத்திற்கு வகை செய்யும். ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை’ என்பார் திருவள்ளுவர். உழவினார் கை நீட்டில் இல்லை என்போம் நாம். உலகுக்கே சோறு போடும் உழவன் தன்னிறைவு பெறாமல் பிறர் கையை நாடி நின்றாலோ அல்லது உணவுப் பொருள் விலை கொடுத்து வாங்கும் நிலை வந்தாலோ மானுடம் அழிவைநோக்கி நகர்கிறது. சமூகம் சீரழிவை நோக்கி முன்னேறுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக உணரலாம்.

சென்றமுறை சில தொட்டிகளில் காய்கனி செடிகள் வளர்க்குமாறு கூறினேன். இதனால் பெரிதாக என்ன கிடைத்துவிடப்போகிறது என்று கூறியவர்களும் உண்டு. உதாரணமாக ஒரு தெருவில் உள்ள இருபது வீடுகளில் வாரத்திற்கு 100கிராம் வீதம் கிடைத்தாலே ஒரு கிராமம் அல்லது நகரத்தின் மொத்த உற்பத்தி எவ்வளவு என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது புரிந்துவிடும். சில பருவ காலப் பகுதிகள் (climatic zones) பிரத்தியேகப் பயிர் உற்பத்திக்கு உயர்ந்தவை. உதாரணமாக நாகர்கோவில், கொடைக்கானல், ஊட்டி மற்றும் இது போன்ற இடங்களில் உள்ள வீடுகளில் ஆர்கிட், ஆந்தூரியம், கிளாடியோலஸ் போன்ற தாவரங்களை வளர்ப்பீர்களேயானால் அவற்றை சிறு குழுக்களாக சேகரித்து ஏற்றுமதி வரை சென்று அதிக லாபம் பெறமுடியும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞரணி அமைப்புக்கள் மற்றும் மாணவரணிகள் இது போன்று துவங்கலாம். விருப்பமானவர்களுக்கு நாற்றுக்களை வழங்கி வளர்க்கச் சொல்லி செய்தித்தாள் விநியோகிப்பது போன்று காலையில் இப் பூக்களை சேகரித்து மலர் (cut flowers) சந்தையில் விற்பதன் மூலம் நல்ல இலாபம் பெற இயலும். மீண்டும் பேசலாம். தன்னிறைவை நோக்கி முன்னேறலாம்.

முனைவர் யாசின்ஜெசிமாகான்
வேளாண் ஆராய்ச்சி பணி.
தாவர மரபுப் பெட்டகம் – இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்.
பூசா வளாகம், புதுதில்லி – 110012

Leave a Reply

You must be logged in to post a comment.