பிரதம சேவகன்

“உங்கள் குறைகளை, உங்கள் பிரச்சினைகளை என்னிடம் சொல்லுங்கள். அவைகளை நான் தீர்த்து வைப்பேன். நான் இந்த நாட்டின் பிரதம மந்திரி இல்லை. பிரதம சேவகன்.”

கடல் போல் ஆரவாரித்த மக்கள் கூட்டத்தில் அவர் கைகளை விரித்தபடி பேசினார். மேடை, பாதுகாப்பு இடைவெளி எல்லாம் தாண்டி, தூரத்தில் சின்னப் புள்ளிகளான மக்களில் ஒருவராய் இருந்த மாளவியாவும் எழுந்து நின்று கைதட்டினார்.

அந்தச் சின்ன கிராமத்தில் வாழ்க்கையே அவருக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. என்னவென்றே தெரியாத ஒரு நோயால் பாதிக்கப்பட்டு அவரது ஒரே குழந்தை மெலிந்து, வதங்கிப் போன நாட்களில் காப்பாற்றுவதற்காக தன்னால் முடிந்தவாறெல்லாம் அலைந்து பார்த்தார். கடைசி நம்பிக்கையாய் பிரதம சேவகரே தெரிந்தார்.

ஒருநாள் ரெயில் ஏறி இரவெல்லாம் கக்கூஸ் பக்கத்தில் குளிரில் நடுங்கியபடியே தலைநகருக்கு விடியாத காலையில் வந்து சேர்ந்தார். வித்தியாசமாய்ப் பார்க்கவும், அலட்சியப்படுத்தவும் செய்த மனிதர்களிடம் கேட்டுக் கேட்டு நடந்தே வெயில் எரித்த பகல் நேரத்தில் துப்பாக்கிகளோடு வீரர்கள் நிறைந்த அந்த இடத்தை அடைந்து விட்டார். அங்கே மயான அமைதி இருந்தது. வீரர்கள் வழி மறித்தனர். விசாரித்தனர். சோதனையிட்டனர். விரட்டினர். அவர் அழுதார். பிரதம சேவகரைப் பார்க்க வேண்டும் என கெஞ்சினார். இரக்கமுள்ள ஒரு வீரன் பத்து ருபாய் பிச்சை போட்டு ”கொல்லப்படுவதற்கு முன்னால் போய் விடு’ என அன்பாக அவரை அங்கிருந்து அகற்றினான். செத்துப் போனவராகவே அவர் வீடு வந்து சேர்ந்தார்.

சில காலம் கழித்து, “பிரதம மந்திரி வருகிறார், நூறு ருபாய் தருகிறோம்” என கூட்டத்திற்கு லாரிகளில் அந்த கிராமத்து மக்களை அழைத்துச் சென்றார்கள். வெகுதூரத்தில் மேடையில் ஒரு புள்ளியளவுக்குக் கூட தெரியாத பிரதம சேவகரின் குரல் கேட்டது.

“உங்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். நம் எதிரிகள் தடுக்கின்றனர். உங்களையும் என்னையும் பிரிக்க சூழ்ச்சி செய்கின்றனர். என்னை பொய்யன் என்றும், அயோக்கியன் என்றும் சொல்கின்றனர். மக்களே, நான் தவறு செய்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்” என நாத் தழுதழுத்தார்.

அப்போதும் சிலர் “வேண்டாம், வேண்டாம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களை நம்புகிறோம்” என குரல் கொடுத்தார்கள்.

அருகில் சென்று பார்க்கவே முடியாதவரை எப்படி தூக்கில் போடுவது என அருமைக் குழந்தையை பறிகொடுத்த மாளவியா வானம் பார்த்து வெறித்தனமாக சிரித்துக் கொண்டிருந்தார்.

#சொற்சித்திரம்

Mathava Raj

Leave A Reply