சென்னை
நடராசன் தொடர்ந்து கவலைக்கிடம்
சசிகலாவின் கணவரான எம்.நடராசன் நோய்த்தொற்று காரணமாகச் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலைகுறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவ
மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு
ராகுல் டிராவிட் புகார்
பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தன்னிடம் ரூ.4 கோடி மோசடி செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் போலீஸில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 விக்ரம் இன்வெஸ்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில் 20 கோடி முதலீடு செய்ததில் நான்கு கோடி ரூபாயை திருப்பி தராமல் இழுத்தடிக்கவே, டிராவிட்
புகார் அளித்துள்ளார்.

நாகர்கோவில்
சீமான் சொன்ன விளக்கம்
குமரி மாவட்டத்தில் பேசிய சீமான், ‘தமிழகத்தில் எது நடந்தாலும் கவலைப்படாமல் இமயமலையில் போய் இருப்பதுதான் ஆன்மீக அரசியல். தீவிபத்து ஏற்பட்டாலும், குண்டு வெடித்தாலும் என்ன நடந்தாலும் ஆன்மீகவாதிகள் சாந்தி, சாந்தி என சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதுதான் ரஜினியின் ஆன்மீக அரசியல்’ என்றார்.

புதுச்சேரி
மேடையை நோக்கி பாய்ந்த செருப்பு
புதுச்சேரியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் கடவுள் மறுப்பு பற்றி பேசப்பட்டதால் கூட்டத்திலிருந்து மேடையை நோக்கி செருப்பு ஒன்று வீசப்பட்டது. தொடர்ந்து
அங்கு திரண்ட பா.ஜ.க-வினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்கிருந்த மற்ற கட்சியினருக்கும் பா.ஜ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.
பிறகு, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

பாட்னா
‘டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன்’
பீகார், சர்தார் மருத்துவமனை மருத்துவர்கள், பெண் ஒருவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் ஆபரேஷன் செய்துள்ளனர். ஆபரேஷன் செய்யும்போது ஏற்பட்ட மின் தடையால், ஜெனரேட்டர் வசதியின்றி டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் அப்பெண்ணுக்கு, வலது கையில், நேர்த்தியாக ஆபரேஷன் செய்து முடித்துள்ளனர்.

சென்னை
கார்த்தி சிதம்பரம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
தேடப்படும் நபராக அறிவித்ததை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக சிபிஐ அறிவித்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் விட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் எழுத்துப் பூர்வமாக திங்களன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பாட்னா
லாலு மீண்டும் குற்றவாளி
கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீண்டும் குற்றவாளி எனவும் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுதலை என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற 3 வழக்குகளிலும் இவர் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

புதுதில்லி
ஒத்துழைக்கமாட்டோம் : தம்பிதுரை
`காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வாக்குறுதி தர வேண்டும். அதற்குப் பிறகுதான் எந்த அலுவல்கள் இருந்தா
லும் நாங்கள் ஒத்துழைப்போம். அதுவரையிலும் ஒத்துழைக்க மாட்டோம்’ என அ.தி.மு.க துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் 11 வது நாளாக திங்களன்றும் ஒத்தி வைக்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.