செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்திட தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய மிக முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம ஏரி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் உபரிநீர் செல்லும் மதகு மற்றும் நீர்வழிப்பாதையானது சென்னை பெங்களூர் சாலையின் மிக அருகில் உள்ளது.

மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் மதகு வழியாக திறந்துவிடும் போது உபரி நீர் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும் என்பதால், உபரி நீர் வெளியேற்றம் நிற்கும் வரை இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். இதனால் குறிப்பாக ஒருமாத காலம் வரை இந்த சாலையின் வழியாக வாகனங்கள் செல்லமுடியாது. ஏரியின் மதகை மூடிய பின்னரே மீண்டும் சாலையை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் மதகுகளை திறக்கும் போது இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தும் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பூந்தண்டலம், சோமங்கலம், அமரம்பேடு, நடுவீரப்பட்டு, காட்ரான்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிக்குட்பட்ட மக்கள் குன்றத்தூர் பகுதிக்கும், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக தண்ணீர் திறந்துவிடப்படும் அந்த ஒருமாதகாலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட யாவரும் கிராமத்தை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்படும். அதேபோன்று குன்றத்தூர், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம், மாங்காடு, கோவூர், தண்டலம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் சிறுகளத்தூர் பகுதிக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அதேபோன்று சென்னையில் இருந்து குன்றத்தூர் வழியாக திருப்பெரும்பதூர், செல்லும் வாகனங்களும் வேறு பாதையில் செல்லவேண்டிய நிலை உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் குன்றத்தூர் திருப்பெரும்பதூர் சாலையில் மேம்பாலம் அமைத்திட வேண்டும் என இந்த பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த 20 அண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனாலும் அரசு செவி சாய்க்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியின் போது திருப்பெரும்பதூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் இந்த சாலையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான மண் பரிசோதனை பணிகளும் நடைபெற்றன. அதன்பின் சென்னை பெங்களூர் சாலையில் நான்கு வழிச்சாலை அமைய இருப்தால் இந்த நிதியால் பாலம் அமைக்க முடியாது என கிடப்பில் போட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்றத்தூர் பகுதிக்குழு உறுப்பினர் மு.இளங்கோ தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டபோது அப்போதைய கோட்ட பொறியாளர் செந்தில் கொடுத்துள்ள பதிலில் ரூபாய் 15 கோடி திட்ட மதிப்பீடு தாயர் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் நிதி ஒதுக்கிய பின் பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் அளித்திருந்தார். அரசு நிதி ஏதும் ஒதுக்காததால் எந்த பணியும் நடக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் பாதையில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, அரசிடம் நிதி ஒதுக்கிடு கேட்டு அனுப்பிய நகலைத்தரவேண்டும் என கேட்கப்பட்டதற்கு பதில் கொடுத்துள்ள செங்கல்பட்டு கோட்டப் பொறியாளர் எம்.செல்வக்குமார் குன்றத்தூர் திருப்பெரும்புதூர் சாலை 13/8இல் உயர்மட்ட பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு ஏதும் இதுவரை செய்யவில்லை, அரசுக்கு அனுப்பிய மனுக்கள் ஏதும் இவ்வலுவலகத்தில் இல்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

மேம்பாலம் கட்ட நிதிஒதுக்குமாறு கோரும் இப்பகுதி மக்களுக்கு அரசின் பதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலாவது செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் பாதையில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் மு.இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார். நிதி ஒதுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: