கோவை, மார்ச் 19-
சசிக்குமார் கொலை வழக்கில் கைதான 4 பேர்களின் வீடுகளில் என்ஐஏ., அதிகாரிகள் சோதனை செய்தது சட்டவிரோத செயல் என வழக்கறிஞர் பவானி பா.மோகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தியாளரான சசிக்குமார், கடந்த 2016 ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ.,) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் முபாரக் மற்றும் சுபேர் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ., சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுக்களை வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக கைதான அபுதாகீர், முபாரக் உட்பட 4 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சனியன்று சோதனை மேற்கொண்டனர். அபிதாகீர், சுபேர் வீடுகளில் மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, கைது செய்யப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் பவானி ப.மோகன் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிக்குமார் கொலை வழக்கினை சிபிசிஐடி யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்தது. இந்த வழக்கில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை(யுஏபிஏ) தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. கைதான நால்வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு மீண்டும் அவர்களை விசாரணைக்கு எடுக்க என்ஐஏ., நினைப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக என்ஐஏ., தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை தாங்க முடியாமல்தான், இந்த நான்கு பேரின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடந்துள்ளது. இந்த சோதனை சட்ட விரோத செயல். இந்த கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் வலுக்கட்டாயமாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.இதன் மூலம் மாநில அரசின் விசாரணை அதிகாரம் கேள்வி குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சசிகுமார் கொலை வழக்கில் தான் போலீஸ் காவல்கோரி என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனுவானது சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, சில இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசுஎன்ஐஏ மூலம் முயல்கிறது என்பதை காட்டுகிறது. சசிக்குமார் கொலை வழக்கை என்ஐஏ எடுத்து விசாரிக்க தேவையில்லை. என்ஐஏ., அமைப்பை பாஜக அரசு சித்தாந்த ரீதியில் கையாளுகிறது. இஸ்லாமியர்கள் என்பதால் இந்த சட்டத்தைக் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.