காஞ்சிபுரத்தில் ஓருவழி சாலையாக மாற்றப்பட்ட முக்கிய சாலைகளை மீண்டும் இரு வழிசாலைகளாக மாற்றக்கோரி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் (மார்ச், 19) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் முக்கிய வியாபாரங்கள் நிறைந்த காந்திசாலை, வள்ளல் பச்சையப்பன் சாலை உள்ளிட்ட பகுதியில் இரு வழி சாலைகளாக இருந்த சாலைகளை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி ஒருவழிச் சாலையாக மாற்றி உள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள், பட்டுசேலை வாங்க வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வணிகர்கள் சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் காவல் துறையினர் போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதையடுத்து மீண்டும் இரு வழிச் சாலைகளாக மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா தலைமையில் காஞ்சிபுரம் வணிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் தங்களின் போக்குவரத்து மாற்றம் குறித்த கோரிக்கைக்கு நடவடிக்கை இல்லை என்றால் வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என விக்ரமராஜா தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.