பொக்கன் என்பவரின் குடிசையில் அந்த மனிதர் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கியபோது, அவர்தான் இ.எம்.எஸ் என்று பொக்கன் அறிந்திருக்கவில்லை…..

வாழ்க்கையில் அன்றுவரை மீனை சுவைத்தறியாத ஒரு நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர்களுக்குத் தெரியாது…!

பொக்கனின் குடிசையில் பெரும்பாலும் மீன்கறி தான் இருக்கும்…சிலவேளைகளில் கருவாட்டுக் குழம்பு இருக்கும்…

தோழர்.இ.எம்.எஸ் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கிய முதல்நாள் சோறும் மீன்கறியும் அவருக்கு பொக்கனின் குடும்பத்தினர் உணவாகக் கொடுத்தார்கள்…

இ.எம்.எஸ் எந்த தயக்கமும் காட்டவில்லை…ரொம்பகாலம் பழகிய ஒருவரைப் போல மீன்கறியுடன் உணவு உண்டார்… சிலநாட்கள் கழித்து….

இ.எம்.எஸ் பிறப்பால் நம்பூதிரி என்று அறிந்த பொக்கனும் அவரது மனைவியும் மிகவும் வருத்தப்பட்டார்கள்….தாங்கள் பெரிய தவறிழைத்து விட்டதாகவே கருதினார்கள்… குற்றவுணர்வு மேலிட, இ.எம்.எஸ்-சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்கள்…

எனினும், மெதுவாக தயங்கித் தயங்கி பொக்கன் இ.எம்.எஸ்-ன் முன்னால் குற்றமிழைத்தவரின் உணர்வுடன் தலையைக் குனிந்தவாறு நின்றார்… “என்ன விஷயம் பொக்கன் அண்ணா…?” என்று வயதில் பெரியவரான பொக்கனிடம் இ.எம்.எஸ் வினவினார்…!

அவருக்கு மீன் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார்…”நீங்கள் ஒரு நம்பூதிரி என்று தெரியாமல் நடந்து விட்டது” என்று விளக்கமளித்து இ.எம்.எஸ்.-சை குற்றவுணர்வுடன் ஏறிட்டு பார்த்தார்…

மென்மையாக புன்னகை புரிந்த இ.எம்.எஸ், “மீன்கறி மிகவும் சுவையாக இருந்தது. எனக்கு மீன்கறி ரொம்ப பிடித்திருக்கிறது. இனி அடிக்கடி மீன்கறி சமைத்துத் தாருங்கள்…” என்றார்.

பொக்கனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை…தான் பெரிய தவறிழைத்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இ.எம்.எஸ் இப்படி ஒரு பதிலைக் கூறுவார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை…

பொக்கன் இ.எம்.எஸ்-க்கு மீன்கறி மட்டுமல்லாது வேறு என்ன உணவளித்தாலும் அதை அன்புடன் மிகுந்த சிரத்தை எடுத்து வழங்கி வந்தார்…

மிகுந்த ஏழ்மையிலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் தனக்கு சிரத்தையுடன் உணவளிக்கும் பொக்கனின் குடும்பத்தினரின் அன்பில் தோழர். இ.எம்.எஸ் நெகிழ்ந்து போனார்…அவர்கள் தரும் உணவை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டார்…

ஏனெனில் பொக்கன் தரும் உணவிற்கெல்லாம் உண்மையான கள்ளங்கபடமற்ற மனித அன்பின் சுவை இருப்பதாக இ.எம்.எஸ் கூறி தனது அன்பை வெளிபடுத்துவார்…

இவ்வாறு இரண்டு வருடங்கள் அங்கேயே தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்தது…

இதற்கிடையே வேறொரு சம்பவம் நடந்தது…
ஒருநாள் பொக்கனின் மகன் குஞ்ஞிராமன் மாத்ருபூமி மலையாளப் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார்….

பத்திரிகையில் ஒரு விளம்பரம்…
100 ரூபாய் வெகுமதி…என்ற தலைப்பில்……
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்படி கீழே குறிப்பிட்ட நபரை கைது செய்ய காவல்துறைக்கு தகவல் தருபவர்களுக்கு 100 ரூபாய் சன்மானமாக வழங்கபடும்…
அவரது பெயர்…ஏலங்குளம் மனைககல் சங்கரன் நம்பூதிரிப்பாடு என்று குறிப்பிட்டு படமும் வெளியிடப்பட்டிருந்தது….

அதன் பிறகு இந்த விளம்பரம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது….

சன்மானத்தொகை 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரித்தது….அன்றைய 1000 என்பது இன்றைய கோடியையும் தாண்டும் பெரிய தொகையாகும்…

பொக்கனும் குஞ்ஞிராமனும் பயத்தில் இ.எம்.எஸ்-ன் முன்னாள் வந்து நின்றார்கள்…”தோழர்..! பத்திரிகை விளம்பரத்தை பார்த்தீர்களா?”

“பார்த்தேன்…உங்களுக்கு என்ன தோன்றுகிறது…? இப்போது என்னைப்பற்றிய தகவல் கொடுத்தால் 1000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்” என்று சிரித்தவாறே கூறினார்…

ஐயோ தோழர்…இப்படியொன்றும் சொல்லாதீர்கள் தோழர்…ஆயிரமல்ல லட்சம் கொடுத்தாலும் பொக்கனின் மனது மாறாது…நான் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்..”என்று பொக்கன் பதறினார்…

ஏழ்மையுடன் பிறந்து, ஒவ்வொரு நாளும் வறுமையுடன் போராடிகொண்டிருக்கும் பொக்கன் அவ்வாறு கூறியபோது இ.எம்.எஸ்-ன் கண்கள் அன்பினால் நிறைந்தன…

பொக்கனை கட்டியணைத்தார்…

தன்னுடைய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை துச்சமென துறந்த இ.எம்.எஸ்-ம்….தான் நினைத்தால் தனது ஏழ்மையை விரட்டி சுகபோகத்துடன் வாழக் கிடைத்த வாய்ப்பை புறந்தள்ளிய பொக்கனும் தாங்கள் கொண்ட சித்தாந்தத்தை பெரிதாக மதித்தவர்கள்…

அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்…
அப்படித்தான் கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள்…

இ.எம்,எஸ் போன்ற தலைவர்கள் காட்டிய பாதையில் கம்யூனிஸ்டுகள் அந்த தியாக வாழ்க்கைத் தான் வாழ்கிறார்கள்…

மார்ச்-19 தோழர். இ.எம்.எஸ் நினைவுதினம்..

பதிவு: Sadan Thuckalai

Leave a Reply

You must be logged in to post a comment.