சேலம், மார்ச் 18-
சேலம் அருகே வாகன உதிரிபாகங்கள் விற்பனை மையத்தில் தீவிபத்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.

கோவை மாவட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சேலம் மாவட்டம் பெரியபுதூர் அருகே உள்ள மிட்டாபுதூர் பகுதியில் நான்குசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மொத்த விற்பனை செய்யும் மையத்தை நடத்தி வருகிறார். தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இயங்கி வரும் இந்த விற்பனை மையத்தில் இருந்து ஞாயிறன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரதற்குள் தீ மளமளவென அதிகரித்தது. இந்த விற்பனை மையத்தின் ஒரு பகுதியில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சின் ஆயில் இருப்பு வைத்திருந்தனர். இந்த ஆயில் முழுவதும் தீப்பற்றியதால் அடர்த்தியான கரும்புகை வெளியேறியது. முதல் தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தத உதிரி பாகங்களும் தீப்பற்றிக்கொண்டன.

புகை மூட்டம் காரணமாக தீயை அணைக்கும் பணி சிரமமானது. இருந்தாலும், 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும், மாநகராட்சி குடிநீர் வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில், தரைதளத்தின் ஒரு பகுதியில் உள்ள மிலிட்டரி கேண்டீன் பகுதியிலும் தீபரவ தொடங்கியதால் அங்குள்ள வீட்டு உபயோக பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், தீவிபத்திற்கான காரணம் குறித்து அழகாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.