திருப்பூர், மார்ச் 18 –
ரயில்வே துறை தேர்வு வாரியம் அறிவித்துள்ள தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போருக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 20ஆம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மா.மல்லிகாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தன. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித்தேர்வர்களுக்கு தயாரகும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.மேலும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ளன.

தற்போது, ரயில்வே துறையில் உதவி லோகோ பைலட், ஹெல்பர், எலெக்ட்ரிக்கல், டிராக்மேன் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்ற கடந்த 10-ம் தேதி இந்திய ரயில்வே துறை மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மார்ச் 31 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு 10ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் (டிப்ளமோ) தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு www.rrb.cheenai என்ற இணையத்தை பார்வையிடலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்கள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் (மார்ச் 20) செவ்வாயன்று காலை 10 மணி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட
உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவசப் பயிற்சியில் பங்கேற்று தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வேலைவாய்ப்பு அடையாள பதிவு அட்டை, ஆதார் அட்டை மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்ததுக்கான விண்ணப்ப நகலுடன் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியின் இறுதியில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: