சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் என்று சிலரால் கூறப்படும் மணல் திட்டை அகற்ற மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியா-இலங்கை இடையிலான கடற்பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்திற்காக ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 150 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இராமாயணக் கதையில் கூறப்பட்டுள்ள பாலம்தான் அந்த மணல்திட்டு என்று எந்த விதமான அறிவியல் ஆய்வும் இன்றி சிலர் கூறத்துவங்கினர். இந்த புராணக் கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக ஊதிப்பெரிதாக்கப்பட்டது. தற்போது மத்திய அரசே அந்த மணல் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று சாதிப்பது விநோதமாக உள்ளது. மத்திய அரசே இந்த நிலையை எடுத்திருப்பதால், தான் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப் பெறுவதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். அதாவது, சுப்ரமணிய சாமி போன்றோர் முன்வைத்த அடாவடி வாதத்தை மோடி அரசேமுன்வைத்துள்ளது.

300 மீட்டர் அகலமும் 167 கிலோ மீட்டர் நீளமும் 12 மீட்டர் ஆழமும் கொண்டது சேது சமுத்திரதிட்டம். 1860 ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையைச் சேர்ந்த ஏ.டி.டெய்லர் என்பவர் இந்த ஆலோசனையை முன்வைத்தார். பின்னர் நேரு காலத்திலும், இந்திரா காந்தி காலத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அமைந்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2427 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தத்திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் கட்டிய பாலம் இடிந்துவிடும் என்று சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற விசாரணை நீடித்துக் கொண்டே போகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்கள் பலன் பெறும். சிறு துறைமுகங்கள் அமையும். வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால், புராணக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டத்தில் மண் அள்ளிப் போடும் வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இராமாயணக் கதைக்கும் இந்தப் பாலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை, இப்போதுள்ள இலங்கை அல்ல என்றெல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்த வாதம் எதையும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஏற்க தயாராக இல்லை. உச்சநீதிமன்றத்தின் விசாரணை செல்லும் போக்கும் கூட திட்டம் நிறைவேறுமா என்ற ஐயப்பாட்டையே எழுப்புகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட வழித்தடத்தில் சேது சமுத்திரதிட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை முடக்குவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் ஆகும்.

Leave A Reply