கோவை, மார்ச் 18-
பெண்களுக்காக மகளிர் மட்டும் சிறப்பு பேருந்தை கோவை மாநகரத்தில் இயக்க வேண்டுமென இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் கோவை மாவட்ட மாநாடு திருச்சிசாலையில் உள்ள எல்ஐசி யூனியன் அலுவலகமான சரோஜ்பவனில் ஞாயிறன்று நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சீலாராஜ் தலைமை தாங்கினார். மாநாட்டு நோக்கங்கள் குறித்து வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உரையாற்றினார். மாநாட்டில் பாரதிசெல்வா, பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக, மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம், கல்லூரிகளுக்கு பெண்கள் எளிதாக சென்றுவர மகளிர் மட்டும் சிறப்பு பேருந்தை இயக்க வேண்டும். பணிநிமித்தமாக கோவை மாவட்டத்திற்கு வரும் பெண்கள் பாதுகாப்பாக தங்கி திரும்பிச்செல்ல ஏதுவாக பெண்கள் தங்கும் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கண்கானிப்பு குழுக்கள் உள்ளிட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் பத்து பேர் கொண்ட உபகுழு அமைக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக பாரதி, துணை அமைப்பாளர்களாக கிருபாஸ்ருதி, மைதிலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாநாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: